இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2016 முதல் ‘கேலோ இந்தியா – விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்’ என்ற மத்திய துறை திட்டத்தை நடத்துகிறது. ‘கிராமப்புற மற்றும் உள்நாட்டு / பழங்குடியின விளையாட்டுகளை ஊக்குவித்தல்’ இதன் ஒரு துணைக் கூறாகும். இது நாட்டில் கிராமப்புற மற்றும் உள்நாட்டு / பழங்குடியின விளையாட்டுகளின் வளர்ச்சிக்கானது.
‘கேலோ இந்தியா’ திட்டத்தின் ‘கிராமப்புற மற்றும் உள்நாட்டு / பழங்குடியின விளையாட்டுகளை ஊக்குவித்தல்’ என்ற துணைக்கூறின் கீழ், மல்லாகம்ப், களரிப்பயட்டு, கட்கா, தங்-டா, சிலம்பம், யோகாசனம் ஆகியவை, உள்கட்டமைப்பு மேம்பாடு, உபகரணங்கள் உதவி, பயிற்சியாளர்கள் நியமனம், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை ஆகியவற்றைப் பெறுகின்றன.
கேலோ இந்தியா திட்டத்தின் ‘கேலோ இந்தியா மையங்கள்’ பிரிவின் கீழ், நாட்டின் விளையாட்டு சூழலை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதற்கான அரசின் தொலைநோக்கின் ஒரு பகுதியாக, குறைந்த செலவில், பயனுள்ள விளையாட்டு பயிற்சி நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் முன்னாள் விளையாட்டு வீரர்களை இளைஞர்களுக்கு பயிற்சியாளர்களாகவும் வழிகாட்டிகளாகவும் நியமிக்கலாம். மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய விளையாட்டு ஆணையம் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சியாளர்களாக பணியமர்த்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இத்தகவலை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மக்களவையில் இன்று அளித்தார்.