இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி காவல்துறை மற்றும் பொது சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில விவகாரங்கள் ஆகும். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதளக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டறிவது, விசாரிப்பது மற்றும் வழக்கு நடத்துவது ஆகியவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும். சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட விதிகளின்படி சட்ட அமலாக்க முகமைகள் சட்ட நடவடிக்கை எடுக்கின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களின் கீழ் ஆலோசனைகள் மற்றும் நிதி உதவிகள் மூலம் அவர்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது.
சைபர் குற்றங்களை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கையாள்வதற்கான செயல்முறையை வலுப்படுத்தவும், அதன் மூலம் விசாரணைகளின் செலவைக் குறைக்கவும், மத்திய அரசு பின்வருவனவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
• நாட்டில் உள்ள அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் கையாள ‘இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம்’ (ஐ 4 சி) நிறுவப்பட்டுள்ளது.
• அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல்துறையின் விசாரணை அதிகாரிகளுக்கு இணையதள மற்றும் நேரடி முறைகள் மூலம் ஆரம்ப கட்ட சைபர் தடயவியல் உதவியை வழங்குவதற்காக புதுதில்லியில் ‘தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம் (விசாரணை)’ நிறுவப்பட்டுள்ளது.
• சைபர் கிரைம் விசாரணை, தடயவியல், வழக்கு விசாரணை போன்ற முக்கிய அம்சங்கள் குறித்த இணையதள வகுப்புகள் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர், காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ‘சைட்ரெயின்’ போர்ட்டல் என்ற மிகப்பெரிய திறந்த இணையதள படிப்புகள் (எம்ஓஓசி) தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
• காவல்துறையினர், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களுக்கு விசாரணை மற்றும் வழக்குகளை சிறப்பாகக் கையாள்வதற்கான பயிற்சி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வகையான சைபர் குற்றங்கள் தொடர்பான சம்பவங்களை பொதுமக்கள் புகாரளிக்க உதவும் வகையில் ‘தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் தளம்’ ( https://cybercrime.gov.in ) தொடங்கப்பட்டுள்ளது.
• நிதி மோசடிகள் குறித்து உடனடியாக புகாரளிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் சிறப்பு அமைப்பு’ தொடங்கப்பட்டுள்ளது.
• பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் தடுப்புத் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.122.24 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
• சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தேவையான தடயவியல் ஆதரவை வழங்கவும், தகவல் தொழில்நுட்ப சட்டம் விதிகளுக்கு ஏற்ப ஆதாரங்களைப் பாதுகாக்கவும் ஹைதராபாத்தில் ‘தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம் (ஆதாரம்)’ அமைக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.