அனைத்து மக்களுக்கும் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. பகவந்த் கூபா கூறியுள்ளார்.
மேற்கூரை சூரிய சக்திக்கான தேசிய இணையதளத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டு 30.07.2022 அன்று தொடங்கி வைத்தார். இதனையொட்டி இந்தத் தளம் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா மற்றும் அகில இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சங்கங்களின் (ஏ.ஐ.ஆர்.இ.ஏ) நிறுவன நாள் நிகழ்ச்சி ஆகியவை கோவாவில் நேற்று (29.07.2023) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. பகவந்த் கூபா உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், கோவா மின்துறை அமைச்சர் திரு சுதின் தவாலிகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய இணையமைச்சர் திரு பகவந்த் கூபா, 2022 க்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே எட்டப்பட்டதாக குறிப்பிட்டார். இந்த வெற்றியின் அடிப்படையில், 2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை எட்டுவதற்கான இந்தியாவின் புதிய இலக்கை பிரதமர் வெளியிட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். 2070 க்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு கொண்டு வரும் இலக்கு மற்றும் செயல்திட்டத்தையும் பிரதமர் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் திரு பகவந்த் கூபா கூறினார்.
எரிசக்தித் துறையில் தன்னிறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டங்களை அரசு செயல்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் ரூ. 19,500 கோடி முதலீட்டில் 65 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டங்களை செயல்படுத்தி, 2030 ஆம் ஆண்டிற்குள், மொத்தம் 500 ஜிகாவாட் திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் 280 ஜிகாவாட் சூரிய சக்தி திறன் தொடர்பான திட்டங்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், பசுமை எரிசக்தித் துறையில் மாநில அரசின் முன்முயற்சிகளை விரிவாக எடுத்துரைத்தார்.
AP/PLM/DL
(Release ID: 1944137)