2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 1900ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒரே முறை மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் தங்கப் பதக்கப் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை கிரிக்கெட் “T20” வடிவில் நடைபெறவுள்ளது. அதாவது குறைந்த ஓவர்களில் அதிக சுவாரஸ்யம் நிறைந்த போட்டிகள் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான தகுதி முறைமைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், ICC உலக தரவரிசையில் முதலிடம் பெற்ற நாடுகள் தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதன்படி, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா, அணிகள் ஆண்கள் பிரிவில் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. பெண்கள் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் தங்கள் இடத்தை உறுதிசெய்துள்ளன.
இந்திய அணியின் நேரடி தகுதி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்காக இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கும் தருணம், நாட்டின் விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயமாக அமையும் என நம்பப்படுகிறது. கிரிக்கெட்டின் ஒலிம்பிக் மீள்நுழைவு, உலகளாவிய விளையாட்டு உலகிற்கு புதிய உற்சாகத்தை வழங்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
