வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பான் வான் கியாங், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவரை மாளிகையில் இன்று (19.06.2023) சந்தித்துப் பேசினார்.
ஜெனரல் மற்றும் அவரது குழுவினரை வரவேற்றுப் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியாவும் வியட்நாமும் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதாகவும், 2000 வருடங்களுக்கு மேலான கலாச்சாரத் தொடர்பைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் கிழக்குக் கொள்கையில், வியட்நாம் முக்கிய தூணாகத் திகழ்வதாகவும், இந்தோ பசிபிக் தொலைநோக்கில் முக்கிய கூட்டாளியாக விளங்குவதாகவும் அவர் கூறினார். ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்பு, எரிசக்தி பாதுகாப்பு, வளர்ச்சி ஒத்துழைப்பு, கலாச்சாரம், இருநாட்டு மக்களிடையேயான தொடர்பு உள்ளிட்டவற்றில் இருநாடுகளுக்கு இடையே விரிவான கூட்டாண்மை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டாண்மையின் வலிமையான அம்சமாக திகழ்கிறது என்று அவர் கூறினார். திறன் மேம்பாடு, தொழில்துறை ஒத்துழைப்பு, அமைதிப் பராமரிப்பு கூட்டுப்பயிற்சி உள்ளிட்டவற்றில் இந்தியா – வியட்நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவானதாக அமைந்துள்ளது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.