புதுப்பொலிவுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் கடலூரில் உதயமானது ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா.
திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு திரையரங்குகளை தொடங்கியதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் தடம் பதித்தது.
இதைத் தொடர்ந்து பழைய மகாபலிபுரம் சாலை, தி. நகர், மதுரவாயல் என தொடர்ந்து திரையரங்குகளை விரிவுபடுத்திய கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தலைமையிலான ஏஜிஎஸ் குழுமம் தற்போது சென்னையில் 18 திரைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உயர்தர திரையரங்கு அனுபவத்தை குறைந்த செலவில் தர வேண்டும் என்ற தனது நோக்கத்தின் முதல் படியாக கடலூரில் இருந்து தனது பயணத்தை இன்று (பிப்ரவரி 9) ஏஜிஎஸ் தொடங்கியுள்ளது.
கடலூரில் மிகப் பிரபலமான கிருஷ்ணாலயா தியேட்டர் உடன் இதற்காக இணைந்துள்ள ஏஜிஎஸ், புதுப் பொலிவுடன், அதிநவீன தொழில்நுட்பங்களுடன், பெருநகரங்களைப் போன்ற வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை இன்று திறந்துள்ளது. ஏஜிஎஸ் குழுமம் சார்பாக ஐஸ்வர்யா கல்பாத்தி திரையரங்கை திறந்து வைத்தார்.
கண்கவர் 4கே திரையிடல், காதுகளுக்கு விருந்தளிக்கும் டால்பி அட்மாஸ் ஒலி என இதுவரை கடலூர் மாவட்டத்திலேயே இல்லாத அளவில் சர்வதேச தரத்தில் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கு தயாராகி உள்ளது. முதல் படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரையிடப்படுகிறது.
கடலூர் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா திரையரங்கை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனது திரையரங்கு சேவைகளை ரசிகப் பெருமக்களுக்காக ஏஜிஎஸ் விரைவில் வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.+