அரசு ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதன் மூலம் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்
நியாயம் செய்யும் கலாச்சாரம் இப்போது அதிகார கலாச்சாரத்தை முந்திவிட்டது – பாதுகாப்புத்துறை அமைச்சர்
“அமிர்த காலத்தில் தேசத்திற்கு சேவை செய்ய அதிகாரிகளுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது”
கடந்த ஒன்பது ஆண்டுகளில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளதாகவும், இப்போது உலகம் அதை உன்னிப்பாகக் கவனிக்கிறது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜூன் 18, 2023 அன்று லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களிடையே உரையாற்றிய அமைச்சர், வளர்ந்த இந்தியா என்ற எண்ணம் இப்போது வெறும் கனவு அல்ல, அது பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நிஜமாகி வருகிறது என்றார்.
இப்போது அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு, இந்தியப் பிரதமரை வரவேற்கவும், விருந்தளிக்கவும் விடாமுயற்சியுடன் தயாராகி வருவதாகவும், நாட்டின் வெற்றிக் கதையைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் பேசுகின்றன என்றும் கூறினார்.
2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர் அத்தகைய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளம் அரசு ஊழியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றார்.
அரசு ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் மூலமும், அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
“ஒரு காலத்தில் சமூகத்தில் அதிகார கலாச்சாரம் இருந்தது, இப்போது நியாயம் செய்தல் கலாச்சாரம் அதிகார கலாச்சாரத்தை முந்தியுள்ளது, ஏனெனில் குடிமக்கள் கல்வி மற்றும் புதிய தகவல்தொடர்பு வழிமுறைகளின் வருகையுடன் அதிக விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார். உங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்,” என வலியுறுத்தினார். பெண்களின் ஆர்வம் மற்றும் உத்வேகத்தையும் அவர் பாராட்டினார். இளம் அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்காக எந்த முடிவையும் எடுக்கும்போது சமூகத்தின் கடைசி நபரைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.