சென்னை, ஆகஸ்ட் 15, 2024: அந்நிய ஆதிக்கத்திலிருந்து நம் நாடு விடுதலை பெற்ற 78-வது சுதந்திர தினத்தையும் மற்றும் இவ்வங்கி நிறுவப்பட்ட 118-வது ஆண்டுவிழா நிகழ்வையும் (ஃபவுண்டேஷன் டே) இந்தியாவின் பிரபல வங்கிகளுள் ஒன்றான இந்தியன் வங்கி இன்று கொண்டாடியது. நாட்டின் செழுமையான பாரம்பரியத்தை பெருமிதத்துடன் நினைவுகூரும் இந்நிகழ்வு, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மீதான இவ்வங்கியின் பொறுப்புறுதியை புதுப்பிக்கும் நிகழ்வாகவும் அமைந்தது. சென்னை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலக வளாகத்திலும் மற்றும் ராயப்பேட்டையில் அமைந்துள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் & தலைமை செயல் அதிகாரி திரு. S L ஜெயின் நமது நாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வுகளில் வங்கியின் அதிகாரிகளும், பணியாளர்களும் திரளாக பங்கேற்றது அவர்களின் தேசப்பக்தி உணர்வை நேர்த்தியாக வெளிப்படுத்தியது.
118-வது ஃபவுண்டேஷன் தினத்தை நினைவுகூரும் வகையில் தொன்மையான (வின்டேஜ்) கார்களின் பேரணி மற்றும் அணிவகுப்பை இந்தியன் வங்கி ஏற்பாடு செய்து நடத்தியது. எம்ஆர்சி நகரில் லீலா பேலஸ் வளாகத்திலிருந்து, வளர்ச்சி மற்றும் செயல்நேர்த்திக்கான இந்தியன் வங்கி அகாடெமி வளாகம் வரை கார்களின் பேரணியும் மற்றும் அணிவகுப்பும் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஒலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டின் பிரதிநிதிகளாக பங்கேற்ற பிரபல விளையாட்டு வீரர்களான S. திருமால்வளவன், V.R. தினேஷ் நாயக் மற்றும் V ஜெயலட்சுமி ஆகியோரும் பங்கேற்று இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது உரையாற்றிய திரு. ஜெயின், நமது தேசத்தின் விடுதலைக்கு வழிவகுத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தேசத்தின் ஒருமைப்பாட்டை காப்பதற்கு உயிர் தியாகம் செய்த படைவீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். சுதந்திரம் பெற்றதிலிருந்து, அர்ப்பணிப்பு, வளர்ச்சி, மனஉறுதி ஆகியவற்றைக் கொண்ட நமது தாய்நாடான இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிப் பயணத்தையும் மற்றும் நிகரற்ற சாதனைகளையும் தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார். நிதிசார் சேவைகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்வது, சமூகங்கள் திறனதிகாரம் பெறுவதை ஏதுவாக்குவது மற்றும் இன்னும் அதிக வளமான எதிர்காலத்தை நோக்கி நமது நாட்டை முன்னெடுத்துச் செல்வது ஆகிய குறிக்கோள்களை அடைவது மீது இந்தியன் வங்கி தொடர்ந்து வலுவான பொறுப்புறுதி கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இரு பெரும் விழாக்களை கொண்டாடிய அதே தருணத்தில், தாக்கம் ஏற்படுத்தும் முன்னெடுப்பு திட்டங்களின் வழியாக சமூக சேவை மீதான தனது பொறுப்புறுதியையும் இந்தியன் வங்கி வெளிப்படுத்தியது. சென்னையில் இயங்கிவரும் பார்வையற்றோருக்கான சிறுமலர் மேனிலைப்பள்ளியில் பார்வைத்திறன் பாதிப்புள்ள மாணவர்களின் கல்வி மற்றும் சுயசார்பு நிலையை ஆதரிப்பதற்காக பிரெய்லி ஸ்டைலஸ்கள், நடப்பதற்கு உதவும் பிரம்புகள், கணக்கு போடுவதற்கு உதவும் சாதனங்கள் மற்றும் JAWS மென்பொருள் உட்பட அத்தியாவசிய கருவிகளை இந்தியன் வங்கி வழங்கியது. இதற்கும் கூடுதலாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் 119-வது வார்டில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களது பிள்ளைகளுக்கு பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் ஆகியவற்றை தனது கார்ப்பரேட் சமூக பொறுப்புறுதி திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கி வழங்கியது. வங்கி சேவையோடு சமூகத்தின் நலவாழ்வு மீது இவ்வங்கி கொண்டிருக்கும் அக்கறையை இந்நடவடிக்கைகள் வலுவாக சுட்டிக்காட்டின.