சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள, பாரதிய ஜனதா கட்சி தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நியமனப் பட்டியலில், முக்கிய பிரபலங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் இடம் பெற்றுள்ளனர். கும்மிடிபூண்டி தொகுதிக்கு மாநில தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் திரு. மகேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேளச்சேரி தொகுதிக்கு மாநில துணை தலைவர் திரு. டால்பின் ஸ்ரீதர் பொறுப்பேற்றுள்ளார். இதேபோல், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு மாநில துணை தலைவர் திருமதி. குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் தொகுதிக்கு திருமதி. மீனாட்சி ஸ்ரீதர் மற்றும் தியாகராய நகர் தொகுதிக்கு மாநில மருத்துவ துறை தலைவர் டாக்டர் பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் மூலம், பாஜக தனது தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்தி, அடிமட்ட அளவில் இருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், தொகுதிகளில் கட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து, தேர்தல் பரப்புரைகளை திட்டமிட்டு, வாக்காளர்களை சென்றடையும் பணிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் முழூவதுமாக கால் பதிக்க தீவிரம் காட்டி வரும் பாஜக, இந்த நியமனங்கள் மூலம் தனது வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ளவும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை வெல்லவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கான அடுத்தக்கட்ட ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.