இந்தியாவிற்கும் புரூனேவிற்கும் இடையிலான உறவை இது வலுப்படுத்தும்
இந்தியாவின் சென்னை மாநகருக்கும் மற்றும் புரூனே – ன் பந்தர் செரி பேகவான் நகருக்குமிடையே தனது புதிய நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதை ராயல் புரூனே ஏர்லைன்ஸ் (RB) பெருமையுடன் அறிவித்திருக்கிறது. ராயல் புரூனே ஏர்லைன்ஸ் – ன் ஏர்பஸ் A320நியோ விமானம், 2024 நவம்பர் 5-ம் தேதியன்று சுமார் 22:50LT மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் முதன் முறையாக வந்து இறங்கியபோது விமானத்தின் மீது இரு பக்கங்களிலிருந்தும் நீரைப் பாய்ச்சி பாரம்பரியமான வரவேற்பு வழங்கப்பட்டது. இவ்விமான நிறுவனத்தின் உலகளாவிய வலையமைப்பில் குறிப்பிடத்தக்க விரிவாக்க நடவடிக்கையாக இந்த புதிய விமான சேவை அமைந்திருக்கிறது. புரூனே மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே கலாச்சார, பொருளாதார மற்றும் மக்களுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துகின்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.
புதிய விமானச் சேவை அறிமுகத்தை இந்தியாவிலுள்ள புரூனே ஹை கமிஷன், புரூனே பொருளாதார மற்றும் மேம்பாடு வாரியம் (BEDB) மற்றும் புரூனே டூரிஸம் (BT) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடு, சென்னையிலுள்ள ஐடிசி கிராண்டு சோழா வளாகத்தில் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் இவ்விமான நிறுவனம் கொண்டாடியது. புரூனேவை மக்கள் விரும்பிச் செல்லும் ஒரு தனித்துவமான சுற்றுலா அமைவிடமாக முன்னிலைப்படுத்துவதும் மற்றும் இந்திய பிசினஸ் நிறுவனங்களுக்கு முதலீடுக்கான வாய்ப்புகளை காட்சிப்படுத்தவும் இருநாட்டு கூட்டாண்மை உறவுகளை வலுப்படுத்தவும் வேண்டுமென்ற குறிக்கோளோடு இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
RB விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இந்தியாவில் RB – ன் முகவரான STIC டிராவல் குரூப் – ன் தலைமை வர்த்தக அதிகாரி மற்றும் புரூனே டூரிஸம் (சுற்றுலா அமைப்பின் பிரதிநிதிகள்) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில் புரூனே குறித்த அறிமுகத்தை அவர்கள் வழங்கினர். புதிய விமானச்சேவை குறித்தும் மற்றும் இரு நாடுகளுக்கிடையே இந்த
விமானச்சேவை தொடங்கப்பட்டிருப்பதன் சிறப்பான முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர்.
BEDB – ன் ஒத்துழைப்போடு, இந்திய பிசினஸ் துறை தலைவர்களுக்காக ஒரு முதலீடு கருத்தரங்கும் நடத்தப்பட்டது. நிலைப்புத்தன்மையுள்ள அரசியல் சூழல், நவீன உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஏஷியான் சந்தைக்கு சிறப்பான அணுகுவசதி ஆகியவை உட்பட, புரூனேயின் கவர்ச்சிகரமான முதலீட்டு சூழல் குறித்த தகவல்களை BEDB பிரதிநிதிகள் வழங்கினர். இந்திய பிசினஸ் நிறுவனங்களுக்கும் மற்றும் புரூனே – ன் பிரதிநிதிகளுக்குமிடையே நல்லுறவிற்கான அடித்தளத்தை இந்த கருத்தரங்கு அமர்வு அமைத்துத் தந்தது; மிக முக்கியமான வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா துறைகளில் கூட்டாண்மைகள் மேற்கொள்ளப்படுவதை இந்நிகழ்வு ஊக்குவித்தது.
“புரூனே நைட்” என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வு இக்கொண்டாட்டங்களின் முக்கியமான அம்சமாகும். புரூனே – ன் செழுமையான கலாச்சாரத்தையும், விருந்தோம்பல் பண்பிணையும் காட்சிப்படுத்தியது. புரூனே – ன் இந்தியாவிற்கான ஹை கமிஷனர், மாண்புமிகு டத்தோ படுகா HJ அலாய்ஹுதீன் முகமது தாஹா இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார். அத்துடன், பாரம்பரியமான புரூனே கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த இரு நாடுகளுக்குமிடையே முறைப்படியான ராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டதன் 40-வது ஆண்டு விழாவையும் இந்நிகழ்வு நினைவுகூர்ந்தது.
இந்தியாவிற்கும், புரூனேவிற்குமிடையே நல்லுறவின் வளர்ச்சி மற்றும் புரிதலை சாத்தியமாக்கியிருக்கின்ற பரஸ்பர நட்புறவு மற்றும் கூட்டாண்மை நான்கு தசாப்தங்களாக சிறப்பாக இருந்து வருவதை இது சுட்டிக்காட்டியது. தமிழ்நாட்டின் தொழில்துறை, வர்த்தகம் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு துறையின் மாண்புமிகு அமைச்சர் டாக்டர். T.R.B. ராஜா இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தில் சென்னை கிளையின் தலைவர் உயர் மதிப்பிற்குரிய திரு. எஸ். விஜயகுமார் கௌரவ விருந்தினராகவும் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் IOFS, செயல்திட்ட இயக்குனர் திரு, B. கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகவும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ராயல் புரூனே ஏர்லைன்ஸ் – ன் தலைமை செயல் அதிகாரி கேப்டன் சபிரின் பின் HJ அப்துல் ஹமீது, இக்கொண்டாட்ட நிகழ்வின்போது பேசுகையில், “இந்த புதிய வழித்தடத்தின் தொடக்கம் என்பது வெறுமனே ஒரு விமான சேவை மட்டுமல்ல; இருநாடுகளுக்கு இடையிலான ஒரு பாலம் இது. புரூனேவுக்கும், இந்தியாவிற்குமிடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை இதன்மூலம் சாத்தியமாக்குவதில் நாங்கள் அதிக உற்சாகம் கொண்டிருக்கிறோம். புரூனே குடிமக்கள் மற்றும் எமது சர்வதேச விருந்தினர்களையும் மற்றும் துடிப்பான பெருநகரமான சென்னையையும் மற்றும் இது வழங்குகின்ற பல இனிய
அனுபவங்களையும் இந்த விமான சேவை இணைக்கிறது. புரூனே தாருஸ்சலாம் – ன் அமைதி நிலவும் அழகை ஆராய்ந்து அனுபவிக்க விரும்புகின்ற இந்திய மக்களுக்கு பயண வசதிகளை இச்சேவை சிறப்பாக மேம்படுத்தும்,” என்று கூறினார்.