இந்திய சினிமாவின் பெருமை என ரசிகர்களால் புகழப்படும் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ திரைப்படம் மார்ச் 28, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில், நடிகர் சூர்யா தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒட்டுமொத்த படக்குழுவினரின் இடைவிடாத கடின உழைப்பைப் பாராட்டியுள்ளார். அவர் தன்னுடையப் பதிவில், ‘உயிர்பிழைக்கும் போராட்டத்தின் கதையைச் சொல்ல 14 ஆண்டுகால உழைப்பு. இதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் அமையும். இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்றார்.
சில சாதாரண நபர்களுக்கு சமாளிக்க முடியாத சவாலை முன்வைக்கும்போது வாழ்க்கை அவர்களை தலைசிறந்த மனிதர்களாக மாற்றுகிறது. பின்னர் அவர்கள் போர் வீரர்களாக பரிணமித்து, மனித வரலாற்றில் தங்கள் பெயர்களை பொறிக்கிறார்கள். ஆடுஜீவிதத்தின் கதாநாயகன் நஜீப், கடவுளின் சொந்த நாடான கேரளாவின் எல்லைகளைத் தாண்டி எண்ணற்ற ஆன்மாக்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளார். அவரது அடங்காத மனம் அந்த எரியும் பாலைவனம், வறண்ட சூழல் மற்றும் வெப்பதால் வடியும் வியர்வை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க விடாமுயற்சி எடுக்க வைத்தது. ஆனால், அவருக்கு அங்கு எதிர்பாராத துயரங்களும் இருந்தது. அவரது போராட்டமும் அதில் இருந்து மீண்ட கதையும் பலருக்கும் முன்மாதிரியாக இப்போது இருக்கிறது.
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படம் பென்யாமின் எழுதிய சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்தத் திரைப்படம் இந்த வியாழக்கிழமை (மார்ச் 28, 2024) திரைக்கு வர உள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்தக் கதைக்கு நிஜ இன்ஸ்பிரேஷனான நஜீப்பின் அசாதரண பயணம் குறித்தும் சில விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தன்னைக் கொடூரமான முறையில் துன்புறுத்திய முதலாளியைத் தவிர, எந்த மனித தொடர்பும் இல்லாமல் அந்த பாழடைந்த பாலைவனத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்த நஜீப் கற்பனை செய்ய முடியாத பல துன்பங்களை அனுபவித்தார். அடிப்படைத் தேவைகள் இன்றிப் போராடிய அவருக்கு மாற்றுவதற்கு உடைகள் கூட ஏதுமில்லை. 700 ஆடுகளைக் கொண்ட மந்தையை தனி ஆளாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நாள் ஆக ஆக, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை இழந்த அவர் தன்னையும் ஆடுகளில் ஒன்றாக அடையாளம் காணத் தொடங்கினார்.
கேரளாவைச் சேர்ந்த பல படிக்காத நபர்களைப் போலவே நஜீப்பும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற ஏமாற்று வாக்குறுதிகளுக்கு பலியாகினார். இயல்பிலேயே அப்பாவியான அவர் 1992 இல் பாலைவனங்களை அடைந்தபோது ஒரு கடினமான மற்றும் மிருகத்தனமான வேலையில் சிக்கிக்கொண்டார். அங்கு மனிதாபிமானமற்ற, உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் சரியான உணவு இல்லாமல் இருந்தது. அங்கிருந்த இரண்டு ஆண்டுகளும் அவருக்கு ஒரு செட் ஆடை மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் அவர் குளிக்க முடியவில்லை. அவரது தினசரி உணவில் உலர்ந்த குபூஸ் மட்டுமே இருந்தது. அதை அவர் ஆட்டுப்பாலில் ஈரப்படுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஆடுகளிலிருந்து வரும் பால், சுகாதாரமற்ற நிலையில் அடிக்கடி துர்நாற்றம் வீசியது. ஏற்கனவே மோசமான அவரது நிலைமையை இது மேலும் மோசமாக்குகிறது. இருந்தாலும், நஜீப் உயிர்வாழ வேண்டும் என்ற ஒரே ஆசையில் விடாமுயற்சியுடன் இருந்தார்.
இரண்டு வருட துன்பம் மற்றும் மனச்சோர்வுக்குப் பிறகு, அவர் சுதந்திரமாக வெளியேற ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை. நஜீப் தனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது விட்டுச் சென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருக்கு பிறந்த குழந்தை மகனா அல்லது மகளா என்று தெரியவில்லை. இப்படி பல உணர்ச்சிகரமான தருணங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறும்போதும் ‘நம்பிக்கை ஒருபோதும் வீண்போவதில்லை’ என்ற இனிமையான செய்தியுடன் பார்வையாளர்கள் வெளியேறுவார்கள் எனப் படக்குழு உறுதியளிக்கிறது.
’ஆடுஜீவிதம்’ திரைப்படத்தை விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பென்யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்ஸி இயக்கியுள்ளார். சுனில் கே.எஸ் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கேஆர் கோகுல், தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் ஆகியோர் நடித்துள்ளனர்.