நமது உணவின் தேர்வாக ஸ்ரீஅன்னா சிறுதானியங்களை நாம் மேற்கொள்வோம்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிச் செய்தி  வழியாக ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

கூட்டத்தில் பங்கேற்ற, அனைத்து முக்கிய பிரமுகர்களையும் இந்தியாவிற்கு வரவேற்பதாகக் கூறிய பிரதமர், மனித நாகரிகத்தின் இதயம் வேளாண்மை என்று குறிப்பிட்டார். ஒரு வேளாண்மை அமைச்சரின் பொறுப்புகள் பொருளாதாரத்தின் ஒரு துறையைக்  கையாளுவது மட்டுமின்றி, மனித குலத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பையும் கொண்டதாகும் என்று குறிப்பிட்டார். உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேளாண்மை வாழ்வாதாரத்தை வழங்குவதாகவும், உலகளாவிய தெற்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தை அது அளிப்பதுடன், 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வேலைகளை வழங்கி வருவதாகவும் பிரதமர் கூறினார். உலகளாவிய தெற்கு இன்று எதிர்கொள்ளும் சவால்களை விளக்கிய பிரதமர், பெருந்தொற்றின் தாக்கம் மற்றும் விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் மோசமான புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன என்று தெரிவித்தார்.  அடிக்கடி தீவிர வானிலை உச்ச நிகழ்வுகளை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றத்தையும் அவர் குறிப்பிட்டார்.

வேளாண் துறையில் இந்தியாவின் பங்களிப்பை விளக்கிய பிரதமர், ‘அடிப்படைகளுக்குத் திரும்புதல்’, ‘எதிர்காலத்திற்கு முன்னேறுதல்’ ஆகியவற்றின் கலவையாக இந்தியாவின் கொள்கை உள்ளது என்று கூறினார். மேலும் இந்தியா இயற்கை வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மையை ஊக்குவித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். “இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் தற்போது இயற்கை வேளாண்மையை மேற்கொண்டு வருகின்றனர்” என்று பிரதமர் கூறினார். அவர்கள் செயற்கை உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை, அவர்கள் அன்னை பூமியைப் புதுப்பித்தல், மண்ணின் வளத்தைப் பாதுகாத்தல், ஒவ்வொரு துளியிலும், அதிக விளைச்சல் என்ற முறையில் கரிம உரங்கள் மற்றும் பூச்சி மேலாண்மை தீர்வுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்று அவர் கூறினார். அதே நேரத்தில், நமது விவசாயிகள் உற்பத்தித்திறனை அதிகரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்கள் பண்ணைகளில் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதையும், பயிர்த் தேர்வை மேம்படுத்த மண்வள அட்டைகளைப் பயன்படுத்துவதையும், ஊட்டச்சத்து உரங்களை  தெளிக்க ட்ரோன்களைப் பயன்படுத்துவதையும் அவர் உதாரணமாகக் காட்டினார். அவர்களின் பயிர்களைப் கண்காணிக்கவும். வேளாண்மையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த ‘இணைவு அணுகுமுறை’ சிறந்த வழி என்று திரு மோடி தெரிவித்தார்.

 

2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், சிறுதானியம் அல்லது ஸ்ரீ அன்னாவை அடிப்படையாகக் கொண்டு பல உணவுகள் தயாரிக்கப்படுவதால், உயரதிகாரிகள் ஹைதராபாத்தில் தங்கள் தட்டுகளில் இதனை சுவைக்கலாம் என்று கூறினார். இந்த அருமையான உணவுகள் ஆரோக்கியமானவை என்பதுடன், சிறுதானிய பயிருக்கு குறைந்த நீர் மற்றும் உரம் தேவைப்படுவதால் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகிறது என்று திரு மோடி தெரிவித்தார். சிறுதானியங்களின் வரலாற்றை எடுத்துரைத்த பிரதமர், அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருவதாகவும், ஆனால் சந்தைகள் மற்றும் சந்தைப்படுத்தலின் தாக்கம் காரணமாக பாரம்பரியமாக விளையும் உணவுப் பயிர்கள்  அவற்றின் மதிப்பை இழந்ததையும் சுட்டிக்காட்டினார். “நமது விருப்பத்திற்குரிய உணவாக ஸ்ரீ அன்னாவை ஏற்றுக் கொள்வோம்” என்று கூறிய பிரதமர், சிறுதானிய வேளாண்மையில் சிறந்த நடைமுறைகள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான, சிறந்த மையமாக, சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியா உருவாக்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கூட்டு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து வேளாண் அமைச்சர்கள் ஆலோசிக்க வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார். விளிம்புநிலை விவசாயிகளை மையமாகக் கொண்டு, உலகளாவிய உர விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் நிலையான மற்றும் உள்ளடக்கிய உணவு முறையை உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டறியுமாறு அவர்  கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், சிறந்த மண் வளம், பயிர் வளம், மகசூல் அதிகரிப்பு ஆகியவற்றிற்காக அந்த வேளாண் முறைகளை பின்பற்றுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். உலகின் பல்வேறு பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகள், வேளாண்மைக்குப் புத்துயிரூட்டுவதற்கான மாற்று வழிகளை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும் என்று பிரதமர் கூறினார். நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் உலகளாவிய தெற்குப்பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மலிவு விலையில் தீர்வுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வேளாண்மை மற்றும் உணவுக் கழிவுகளை குறைக்க வேண்டிய அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார், அதேசமயம் கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்குவதில் முதலீடு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 

“வேளாண்மையில் இந்தியாவின் ஜி20 முன்னுரிமைகள் நமது ‘ஒரே பூமியை’ குணப்படுத்துதல், நமது ‘ஒரே குடும்பத்தில்’ நல்லிணக்கத்தை உருவாக்குதல் மற்றும் பிரகாசமான ‘ஒரே எதிர்காலத்திற்கான’ நம்பிக்கையை அளிப்பதில் கவனம் செலுத்துகின்றன” என்று அவர் தெரிவித்தார். ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான டெக்கான் உயர்மட்டக் கோட்பாடுகள்’, சிறுதானியங்கள்  மற்றும் பிற தானியங்களுக்கான ‘மகரிஷி’ முயற்சி ஆகிய இரண்டு உறுதியான முடிவுகளின் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். “இந்த இரண்டு முயற்சிகளுக்கான ஆதரவு, உள்ளடக்கிய, நிலையான, மற்றும் நெகிழக்கூடிய விவசாயத்திற்கு ஆதரவான  நடவடிக்கையாகும்” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *