சமீபத்தில் வெளியாகிய பல நேரடி மலையாள படங்கள் தமிழ் திரையரங்குகளில் சக்கை போடு போடுகின்றன. அதற்கு காரணம் அவற்றின் புது விதமான கதைக்களமும், தமிழ் மக்களை கவரும் வகையில் அவர்கள் சொன்ன விதமுமேயாகும். இவ்வரிசையில் வித்தியாசமான படங்களை எப்பொழுதுமே ஊக்குவிக்கும் இயக்குனரான மணிரத்னம் நேற்று புதிய மலையாள படமான பேரடைசின் டிரைலரை வெளியிட்டார். அவரின் நண்பரும், உலக புகழ் பெற்ற இயக்குனருமான பிரசன்னா வித்தனகே இப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கைக்கு சுற்றுல்லா சென்ற இளம்தம்பதி அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதே இப்படத்தின் கதைகளமாகும்.
சென்ற வருடத்தில் பெரிய வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படமான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் கதாநாயகி தர்ஷனா ராஜேந்திரனுடன் இணைந்து ரோஷன் மேத்யூ இப்படத்தில் நடித்துள்ளார். தர்ஷனா ராஜேந்திரன் தமிழில் ஏற்கனவே கவண் மற்றும் விஷாலின் இரும்புத்திரையில் முக்கிய வேடத்தில் நடித்தவர். பிரசன்னா வித்தனகேவுடன் சேர்ந்து அனுஷ்கா சேனநாயகே இப்படத்தை எழுதியிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கையும், தபஸ் நாயக் ஒலிக்கலவையையும், கே இசையையும் கையாண்டிருக்கின்றனர். நியூட்டன் சினிமா தயாரித்த இப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்குகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் முதல் மலையாளப் படம் “பேரடைஸ்” என்பது குறிப்பிடத்தக்கதாகும்
தென்கொரியாவின் பூசான் திரைப்பட விழாவில் இவருடத்திற்கான சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் மதிப்பிற்குரிய கிம் ஜீசக் விருதை வென்ற முதல் தென்னிந்திய படம் “பேரடைஸ்”. அதோடு பிரான்சின் வீசோல் சர்வதேச திரைப்பட விழாவில் ஜீரி விருதையும் பேரடைஸ் வென்றிருக்கிறது. உலகமெங்கும் ஏப்ரலில் ”பேரடைஸ்” திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.