நன்றியுள்ள நாய்க்காக கல்யாணம் பண்ணாமல் வாழும் இளம் பெண்

சென்னை மந்தவெளிப் பகுதி லாலத் தோட்டம் காலணியில் மரத்தடியில் ஒரு சில்வர் பிளேட் இருக்கிறது. இதே போல், பல சில்வர் பிளேட்கள் மரத்தடிக்கு மரத்தடி வரிசையாக அந்த பகுதியில் காணப்படுகின்றன. அந்த சில்வர் பிளேட்டுகளை பின்தொடர்ந்து சென்றால், ஒரு வீடு வருகிறது. வீட்டுக்குள் நுழைந்தால் ஷீரடி சாய்பாபாவின் புகைப்படம்தான் முதலில் நம்மை வரவேற்கிறது. வீட்டுக்குள்ளும் வெளியேவும் கண் தெரிந்தும் தெரியாமலும் கால் ஒடிந்தும் ஓடியாமலும் தத்தி.. தத்தி நடக்கும் நாய்கள் நிரம்பி காணப்படுகின்றன. அவற்றை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

இந்த நாய்களை பராமரித்து வருபவரின் பெயர் மீனா. ஒரே மனுஷி… இத்தனை தெருநாய்களை கடந்த பதினேழு ஆண்டுகளாக பராமரித்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. சென்னயில் ‘டாக் லவர்ஸ்’ ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களிடம்  இருந்து மீனா சற்று வித்தியாசமானவராகத் தெரிந்தார். பொழுது போக்குக்காகவோ அல்லது நமது விருப்பத்திற்காக செல்ல நாய்கள் வளர்ப்பதற்கும் தெருநாய்களுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?.

ஆம்… இந்த தெருநாய்களை பராமரிப்பதற்காக மீனா திருமணம் கூட செய்துக் கொள்ளவில்லையாம். அவரது உறவினர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். தற்போது 36 வயதான மீனா, ”கணவர் என்று வந்து விட்டால், அவர் நிச்சயம் எனது நாய்களை விரும்பமாட்டார். எனக்கும் எனது நாய்களுக்கும் குறுக்கே யார் வந்தாலும் அதனை என் மனம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை” என் தீர்க்கமாக கூறுகிறார்.

இத்தனைக்கும் மீனாவுக்கு தெருநாய்களுக்கு ஆதரவாக செயல்படும்  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியும் கிடையாது.  உண்மையைச் சொல்லப் போனால், அப்படியெல்லாம் என்ஜிஓக்கள் இருப்பதே மீனாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. மந்தவெளிப் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் ஒருவர் மட்டும் மீனாவுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

தினமும் காலையில் தனது வீட்டு உணவு வகைககைளத் தயாரிக்கும் மீனா, அவற்றை எடுத்துச் சென்று மயிலை கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் விற்பனை செய்கிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தன்னை நம்பியிருக்கும் ஜீவன்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறார்.

தனது நாய்களுக்காக அவர் சினிமாவுக்கு கூட போவதில்லை. வீட்டை விட்டு எங்கும் நகர்வதில்லை. இது குறித்து மீனா, ”காலையில் எனது வேலை முடிந்தவுடன் வீட்டை விட்டு எங்கும் போவதில்லை. இங்கிருக்கும் நாய்களில் ஒன்று அரை குறை பார்வையுடன் இருந்தது. தற்போது அது முற்றிலும் பார்வை இழந்துவிட்டது. அதனால் எங்கும் நகர்ந்து செல்ல முடியவில்லை. மற்ற நாய்களை அதனை கடித்து விடக் கூடாது என்பதற்காக அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. ஒரே ஒரு முறை எனக்கு அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை நடந்த போது, எனது நாய்களை விட்டு 10 நாட்கள் பிரிந்து இருந்தேன். மற்றபடி ஒரு கணம் கூட பிரிந்தது இல்லை  என்னை நம்பி வாழும் ஜீவன்கள். என் மீது அளவற்ற அன்பை காட்டுகின்றன. அந்த அன்புடனேயே நான் வாழ்ந்து விட்டுப் போகிறேனே” என்கிறார் .