நேற்று சென்னையில் 95 சதவீதம் கடைகள் அடைப்பு திமுக, விசிக, தமாகா கட்சிகள் மறியல்

காவிரி பிரச்சினையில் கர்நாடகத் தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நேற்று நடத்தப்பட்ட சாலை, ரயில் மறியல் போராட்டங்களின் போது மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

தலைநகர் சென்னையில் 95 சதவீதம் அளவுக்கு கடை கள் அடைக்கப்பட்டன. காவிரி பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி யும், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித்தும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு அரங்கம் முதல் சென்னை எழும்பூர் வரை திமுகவினர் பேரணியாக சென்றனர். எழும்பூர் ரயில் நிலைய வாயிலில், கர்நாடக அரசுக்கு எதி ராகவும், காவிரி பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திமுகவினர் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலை மையில் திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். கைதான திமுகவினர் புதுப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தேமுதிக சார்பில் கோயம் பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட் டத்துக்கு தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார்.

சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் தமாகா தொண் டர்கள் பரவலாக பங்கேற்றனர். இதுகுறித்து கூறிய ஜி.கே.வாசன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்கவும் வலியுறுத்தி நடத்தப்பட்ட முழுக் கடையடைப்பு வெற்றி பெற் றுள்ளன” என்றார்.

அண்ணா சாலையில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். விசிக சார்பில் பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் மறியலில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவனை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட வர்களும் கைது செய்யப்பட்டனர். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, இளைஞரணிச் செயலாளர் ஷேக் முஹம்மது தலைமையில் சைதாப்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான அரசியல் தலைவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.