பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் சிக்கினார்

பெங்களூரில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் போதை வாலிபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் இதயம் போன்ற பகுதியான எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் உற்சாகமாக இருந்த இளம்பெண்களிடம் சிலர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டனர்.

இதனால் செய்வதறியாமல் திகைத்த பெண்கள் போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறினார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூரு நகர பொதுமக்களை பதற வைக்கும் வகையில் ஒரு இளம்பெண்ணை நடுரோட்டில் 2 பேர் மானபங்கப்படுத்தும் வீடியோ காட்சி வெளியான சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் கிழக்கு பெங்களூருவில் உள்ள கம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் புத்தாண்டு கொண்டாடிவிட்டு ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினார்.

கம்மனஹள்ளி 5-வது மெயின் ரோட்டில் ஆட்டோவில் இருந்து அந்த பெண் இறங்கினார். அவர் ஆண்களை போல் பேண்ட், சட்டை அணிந்து ஸ்டைலாக காணப்பட்டார். அவர் அங்குள்ள ஒரு குறுக்கு சந்து வழியாக தனது வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 பேர் திடீரென அந்த இளம்பெண்ணை வழிமறித்தனர்.

ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய ஒருவன் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனாலும் அவனது பிடியில் இருந்து அந்த பெண்ணால் மீள முடியவில்லை. உடனே அவன் கன்னத்தில் அந்த பெண் ஓங்கி ஒரு அறை விட்டார்.

ஆனாலும் அவன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்வதிலேயே குறியாக இருந்தான். இதனால் அந்த பெண் காப்பாற்றுங்கள் என கதறினார். நள்ளிரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் இல்லை.

அந்த பெண்ணை வாலிபர் ஸ்கூட்டர் நிறுத்தி இருந்த பகுதிக்கு இழுத்து சென்றான். ஸ்கூட்டரின் மேல் தள்ளி அந்த பெண்ணின் ஆடையை களைய முயன்றான். இந்த கொடூர செயலுக்கு அவனுடன் ஸ்கூட்டரில் வந்தவனும் உதவி செய்தான்.

அந்த பெண் மானத்தை காப்பாற்றுவதற்காக இறுதி வரை போராடினார். கை, கால்களை உதறிவிட்டு ஓட முயற்சி செய்தார். அவர் திமிறியதை பார்த்த 2 பேரும் அந்த பெண்ணை தாக்கி நடுரோட்டில் தள்ளினார்கள். கீழே விழுந்த அந்த பெண்ணின் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஸ்கூட்டரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

அந்த பெண் தட்டுதடுமாறி எழுந்து உடைகளை சரி செய்துவிட்டு வீட்டுக்கு சென்று நடந்ததை சொல்லி கதறி அழுதார்.

இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் என்பவர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இந்த காமிரா பதிவு காட்சிகளை பிரசாந்த் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

பார்ப்பவர் மனதை பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்- அப்பிலும், இன்டர் நெட்டி லும் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பானஸ்வாடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாகன எண்கள், சம்பவம் நடந்த நேரத்தில் கம்மனஹள்ளி பகுதியில் பதிவான செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய வேட்டையில் நடுரோட்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு வாலிபர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டதாக தெரிகிறது. அவரது நண்பரை தேடிகண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர பெங்களூரு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 7 பேர் போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.