8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெங்களூர் பெண்

ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ள பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், இதுவரை 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூர் அருகே கே.ஜி.ஹள்ளி பகுதியில் வசித்து வரும் இம்ரான் என்பவர், அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கடந்த திங்கள்கிழமையன்று அளித்தார். அதில், தனது மனைவி யாஸ்மின் பானு, தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாகவும், ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளதாகவும், இதுவரை ஏழு பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும், தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஷோயப் மற்றும் அஃப்சல் எனும் இரண்டு பேர் தாமாக முன்வந்து தங்களும் யாஸ்மின் பானுவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஏமாற்றப்பட்ட கணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் யாஸ்மின் மீது மோசடி வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.