மசூத் அசாருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? தி நேசன் பத்திரிக்கையில் கேள்வி

மசூத் அசார், ஹபீஸ் சயீத்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு பத்திரிக்கை கேள்வி எழுப்பி உள்ளது. மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து 10–க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூர தாக்குதல்கள் நடத்தி 150–க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவிக்க மூளையாக இருந்து வழிநடத்திய ஜமாத் உத் தாவா, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன்தான்.

இந்த ஹபீஸ் சயீத். ஐ.நா. பயங்கரவாதியாக அறிவித்து உள்ள ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாகிஸ்தானில் இன்றுவரையில் சுதந்திரமாக திரிந்துக் கொண்டு, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை தயாரித்து அனுப்பி வருகின்றான் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை உதவியுடன். பதன்கோட் தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் (வயது 47), ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன். காஷ்மீரில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக இவன் 1994–ம் ஆண்டு கைது செய்யப்பட்டான்.

ஆனால் ஏர் இந்தியா விமானம் 1999–ம் ஆண்டு காட்மாண்டில் இருந்து காந்தஹாருக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த 155 பயணிகளை விடுதலை செய்வதற்காக மசூத் அசாரும், மேலும் 2 தீவிரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். 2001–ம் ஆண்டு டிசம்பர் மாதம், 13–ந்தேதி இந்திய ஜனநாயகத்தின் கோவில் என வர்ணிக்கப்படுகிற பாராளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை மூளையாக இருந்து செயல்படுத்தியவன்.

இந்த மசூத் அசார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவனை ஒப்படைக்க பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. பதன்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இவனது தொடர்பு குறித்த இந்தியாவிடம் ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதுவரையில் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2001-ம் ஆண்டே உலகளாவிய தடை விதித்தது.

ஆனால் அந்த அமைப்பின் தலைவனான மசூத் அசார் மீது தடை விதிக்கும் முடிவை நிறுத்தி வைத்திருப்பது இன்றுவரையில் புரியாத புதிராக உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஒவ்வொரு நகர்வுக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா தடையை ஏற்படுத்தி வருகிறது. மசூத் அசார் விவகாரத்திலும் இந்நிலையானது நீடிக்கிறது. இந்நிலையில் மசூத் அசார் மற்றும் ஹபீஸ் சயீத்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு பத்திரிக்கை கேள்வி எழுப்பிஉள்ளது.

மசூத் அசார் மற்றும் ஹபீஸ் சயீத் தேச பாதுகாப்பிற்கு பெரும் அச்சமாக உள்ளநிலையில் அவர்கள் மீது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று பாகிஸ்தானின் முக்கிய நாளிதழான தி நேசன் பத்திரிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. ஹக்கானி நெட்வோர்க், தலிபான்  மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு ராணுவம் உதவி செய்யும் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவ தலைமை இடையே பிளவு ஏற்பட்டு உள்ளது என்று கட்டுரை எழுதிய அந்நாட்டு டான் செய்தி நிறுவன பத்திரிக்கையாளர் சிறில் அல்மெய்டாவுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து, நவாஸ் ஷெரீப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் ’தி நேசன்’ பத்திரிக்கை தலையங்கத்தில் கேள்வி எழுப்பட்டு உள்ளது.