தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களில் பெரும்பாலானவை பூட்டிய வீடுகளிலேயே நடக்கின்றது.

அதிலும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், சென்னையில் உள்ள வெளி மாவட்ட மக்கள், ஊருக்கு போவதால், கொள்ளையர்களுக்கு வசதியாகிவிடுகிறது. எனவே, தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும், என சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

வெளியூர் செல்லும் மற்றும் திரும்பி வரும் தேதிகளை காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டால் சம்பந்தப்பட்ட வீடுகளை ரோந்து போலீஸார் கண்காணித்து கூடுதலான பாதுகாப்பை மேற்கொள்வர். இதற்காக சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களிலும் ‘பூட்டியிருக்கும் வீடுகள்’ என்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பதிவேட்டில் வெளியூர் செல்லும் நபர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

பகல், இரவில் சுழற்சி முறையில் ரோந்து செல்லும் போலீஸார், தங்கள் பகுதியில் உள்ள பூட்டிய வீடுகளை தொடர்ந்து கண்காணிப்பர். இதன் மூலம் கொள்ளையர்களின் வியூகம் முறியடிக்கப்படும் என போலீஸார் உறுதியாக நம்புகின்றனர்.

தங்களது பூட்டிய வீடு குறித்து காவல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று தகவல் அளிக்க முடியாதவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் செய்தும் தகவல் தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறை போலீஸார், சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்த தகவலை தெரிவித்துவிடுவர். இதன்மூலம் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.