உத்தர பிரதேஷ், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டசபை இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகின்றது. இதனால் அங்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

நேற்று ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, மணிப்பூர் மாநிலத்தில் சமீபகாலமாக நிலவி வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு அமைதியான முறையில் எப்படி தேர்தலை நடத்துவது? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, மேற்கண்ட மாநிலங்களில் தேர்தல் நடக்கும் தேதி, வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி மற்றும் எத்தனை கட்டமாக தேர்தலை நடத்துவது?, ஆகிய விபரங்களை தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி இன்று அறிவிக்கிறார்.

உத்திரப்பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கும், உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அம்மாநில அரசுகள் நலத்திட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.