தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சை எளிதில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. நெல்லை சங்கர் நகரில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் தூத்துக்குடி பேட்ரியாட்சும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின. துலீப் கோப்பை கிரிக்கெட்டில் ஆடி முடித்து விட்ட தினேஷ் கார்த்திக்கும், அபினவ் முகுந்தும் தூத்துக்குடி அணிக்கு திரும்பினர். திண்டுக்கல் அணியில் ஆர்.அஸ்வின் ஆடாததால் சுப்பிரமணிய சிவா வழக்கம் போல் கேப்டன் பணியை கவனித்தார்.

டாஸ் ஜெயித்த தூத்துக்குடி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இதன்படி கவுசிக் காந்தியும், அபினவ் முகுந்தும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். முந்தைய இரு ஆட்டங்களில் அரைசதம் அடித்து கலக்கிய கவுசிக் காந்தி 9 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த நாதனும்(11 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அபினவ் முகுந்துடன், கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். இவர்கள் அணியை சரிவில் இருந்து பக்குவமாக மீட்டனர். முதல் 10 ஓவர்களில் தூத்துக்குடி அணி 2 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பிறகு இருவரும் ரன்வேட்டையை துரிதப்படுத்தினர்.

முகுந்த், அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டினார். தொடக்கத்தில் நிதானத்தை காட்டிய தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர் சஞ்சயின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி பிரமாதப்படுத்தினார். இதனால் ஸ்கோரும் கிடுகிடுவென உயர்ந்தது. சிக்சர் மழை பொழிந்த அதே ஓவரில் தினேஷ் கார்த்திக் (48 ரன், 31 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். முகுந்த்- கார்த்திக் கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் திரட்டியது.

மறுமுனையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முகுந்த் 91 ரன்களில் (55 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். நடப்பு தொடரில் தனிநபரின் 2-வது அதிகபட்சமாக முகுந்தின் ஸ்கோர் அமைந்தது. இறுதி கட்டத்தில் மேலும் சில விக்கெட்டுகள் விழுந்தன. இல்லாவிட்டால் தூத்துக்குடியின் ஸ்கோர் 200-ஐ நெருங்கி இருக்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. தூத்துக்குடி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணியில் நட்சத்திர வீரர் ஜெகதீசன் அதிரடியாக விளையாடினார். முதல் 5 ஓவர்களில் அந்த அணி 40 ரன்களை எட்டியது.

இதைத் தொடர்ந்து 6-வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் ரகுநாத் (7 ரன்), விக்டர் (0), கங்கா ஸ்ரீதர் ராஜூ (0) ஆகியோரின் விக்கெட்டுகளை மெய்டனுடன் காலி செய்து திருப்பத்தை ஏற்படுத்தினார். இதன் பின்னர் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்க போராடிய ஜெகதீசன் ஆட்டம் இழந்ததும் அந்த அணியின் நம்பிக்கை தகர்ந்தது. 5-வது அரைசதத்தை பூர்த்தி செய்த ஜெகதீசன் 59 ரன்களில் (41 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்த வெங்கட்ராமன் 40 ரன்களில் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறியதும் தூத்துக்குடி அணியின் கை முழுமையாக ஓங்கியது.

திண்டுக்கல் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் லீக்கில் திண்டுக்கல் டிராகன்சிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. தூத்துக்குடி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.