சதீஷ், சற்குணம் அதிரடியால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 179 ரன்கள்: டி.என்.பி.எல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 21-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் கோபிநாத், தலைவன் சற்குணம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கோபிநாத் 6 ரன்கள் எடுத்த நிலையில் ராஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் இறங்கிய சுபாஷ் 2 ரன்னில் முருகானந்தம் பந்தில் க்ளீன் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு சற்குணத்துடன் சரவணன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு நிலைத்து நின்று விளையாடியது. சரணவன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு சற்குணத்துடன் கேப்டன் சதீஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மதுரை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. சற்குணம் 35 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார்.

17-வது ஓவரில் சற்குணம் தலா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 18-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் மூலம் சேப்பாக் அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரில் சதீஷ் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச, சற்குணம் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

கடைசி ஒவரில் முதல் இரண்டு பந்துகளில் தொடர்ந்து சிக்ஸ் அடித்து சதீஷ் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்துள்ளது. சதீஷ் 27 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 57 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.