இந்தியாவின் தூய்மையான நகரங்களில் திருச்சி ஆறாவது இடம்!

இந்தியாவின் தூய்மையான நகரங்களில் திருச்சி ஆறாவது இடம்!

தூய்மை இந்தியா திட்டத்தின் சிறந்த தூய்மையான நகரங்களின் தரவரிசைப் பட்டியலில், மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தூர் முதலிடம், திருச்சி ஆறாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா தினமாக கடைப்பிடிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதை விளம்பரப்படுத்த அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தூதர்களாகவும் நியமித்தார். மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், மாநில அரசுகளால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான சிறந்த தூய்மையான நகரமாக, ‘இந்தூர்’ தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மிகவும் மோசமான, தூய்மை குறைந்த நகரமாக, உத்தரப்பிரதேசத்தின் ’கொண்டா’ நகரம், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த வருடம் தூய்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, அதன் முடிவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். தூய்மை இந்தியா பட்டியலில், கடந்த வருடம் 3வது இடத்தை பிடித்த திருச்சி, தற்போது 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், முதலிடத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்துார் உள்ளது. தொடர்ந்து போபால், விசாகப்பட்டினம், சூரத், மைசூரு, திருச்சி, டில்லி, நவி மும்பை, திருப்பதி, வதோதரா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக குஜராத் மாநிலத்திலிருந்து 12 நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் கோண்டா நகரம் அழுக்கான நகரத்தில் முதலிடத்தில் உள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தின் 50 நகரங்கள் இப்பட்டியலில் கடைசி இடங்களை பெற்றுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் கண்காட்சியில் வேலூர் மாநகராட்சியின் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கண்காட்சியில் வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்த செயல்முறைகளை சமர்ப்பிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்த செயல்முறைகளையும், கும்பகோணம் நகராட்சியில் குப்பை கிடங்குகளை கையாள்வது குறித்த செயல்முறைகளையும், சென்னை மறைமலை நகர் பேரூராட்சி சார்பில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்த செயல்முறைகளையும் விளக்கும் அரங்கங்களும் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்த நகரங்கள்: இந்தூர் (மத்திய பிரதேசம்), போபால் (மத்திய பிரதேசம்), விசாகப்பட்டணம் (ஆந்திர பிரதேசம்), சூரத் (குஜராத்), மைசூர் (கர்நாடகம், கடந்த வருடம் முதலிடத்தில் இருந்தது), திருச்சி (தமிழகம்), புதுடெல்லி நவிமும்பை (மராட்டியம்), திருப்பதி (ஆந்திர பிரதேசம்), வதோதரா (குஜராத்). ஒவ்வொரு வருடமும் நகரங்களில் அமைந்துள்ள கட்டுமான வளர்ச்சி, சுத்தம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்த சுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் டாப்-50 இடங்களில் தமிழகத்தின் திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. கோவை நகரம் 16 வது இடத்திலும், கும்பகோணம் 37வது இடத்திலும் மற்றும் ஈரோடு 42வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரம் இந்த ஆண்டு 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் நகரங்களில் அமைந்துள்ள கட்டுமான வளர்ச்சி, சுத்தம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்த சுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது

Related Post