காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி: நாராயணசாமி பேட்டி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் பொருப்பை ஏற்கும் நேரம் வந்துவிட்டது, என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி கடுமையாக உழைத்து காங்கிரஸ் கட்சியை வளர்த்து வருகிறார். அவர் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்கும் நேரம் வந்துவிட்டது.

ராகுல்காந்திக்கு உயர்பதவி வழங்க ஏதேனும் திட்டமிருந்தால் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அவர் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்கவேண்டும். சோனியாகாந்தி எப்போதும் எங்கள் பாதுகாவலாக இருப்பார். ராகுல்காந்தி கட்சியினை மாநில அளவிலும் தேசிய அளவிலும் வலிமையானதாக மாற்ற கடுமையாக உழைத்து வருகிறார். சமீபத்தில்கூட உத்தரப்பிரதேசத்தில் ஊர்வலங்களை நடத்தினார்.

அவர் நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கும், எனக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை. கவர்னருக்கும், முதல்வருக்கும் உள்ள அதிகாரங்கள் குறித்து அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

நாங்கள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம். எங்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை. இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.