கேரள மாநிலத்தில் பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அந்த மாநில அதிரடிப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தின் படுக்கா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுவதாக அந்த மாநில உளவுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தண்டர்போல்ட் என்று அழைக்கப்படும் கேரள மாநில அதிரடிப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் வருவதை அறிந்து கொண்ட மாவோயிஸ்டுகள் 11 பேர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனராம். அப்போது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. இதில், மாவோயிஸ்டுகள் குப்பு தேவராஜ், சோமன், அஜிதா ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் காயமடைந்த மாவோயிஸ்டுகள் 8 பேர் அங்கிருந்து தப்பிவிட்டதாக அந்த மாநில போலீஸôர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து படுக்கா வனப் பகுதி முழுவதும் சிறப்பு அதிரடிப் படை, வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு கேரள மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வர உள்ளதாகவும், அவர்களின் ஆய்வுக்குப் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என கேரள போலீஸôர் தெரிவித்தனர். நீலகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: இந்தச் சம்பவத்தை அடுத்து, கேரள-தமிழக எல்லையான நீலகிரி மாவட்டத்தின் அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தின் நாடுகாணி, சேரம்பாடி, சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல், ஓவேலி, தாளூர் ஆகிய சோதனைச் சாவடிகளிலும், அட்டப்பாடி வழியிலான கெத்தை, கொலக்கம்பை அருகே உள்ள மானார் சோதனைச் சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடிகளில் ஏற்கெனவே உள்ள காவலர்களுடன் விரைவு அதிரடிப் படையினரும், ஆயுதங்களுடன் கூடிய சிறப்புக் காவல் படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சோதனைச் சாவடிகள் மட்டுமன்றி சுற்றியுள்ள பகுதிகளிலும் ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.

அதேபோல, மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையிலான சிறப்பு அதிரடிப் படைக் குழுவினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுதவிர, கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதியிலும் அந்த மாநில போலீஸôர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.