தெரிந்துக் கொள்வோம்: தி இந்து நாளிதழ் உருவான கதை

இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரி பத்திரிகையான ‘தி இந்து’ தொடங்கப்பட்ட நாள் இன்று. அதாவது, 1878 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தான் முதல் இந்து செய்தித்தாள் வெளியானது.

தற்போது முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாக திகழும் இந்து நாளிதல் உருவானது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்:

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை (Triplicane Literary Society – TLS) சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர்.

தொடர்ந்து கூட்டம் நடத்தி பேசிய பிறகு, ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு ’தி இந்து’ என்ற செய்தித் தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே, இந்து வெளிவந்தது. ஆனாலும் அப்பவே ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது.

1883 ஆம் ஆண்டு முதல் வாரம் மூன்று முறை வெளியாகத் தொடங்கியது. 1887 இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின.

1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள்.

தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர், சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து அதை கடுமையாக எதிர்த்தது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டது.

1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது.

1987 இல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவியும் இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் என். ராம் இந்துவின் நிர்வாக இயக்குனராக இருக்கின்றார்.

இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008 இன் படி, இந்து தினம் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது (முதலிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா). படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது.

இந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, நோய்டா, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொச்சி, விஜயவாடா, மங்களூர், திருச்சி, கொல்கத்தா, ஹூப்ளி, மொகாலி, அலகாபாத், மலப்புரம், லக்னோ, அனந்தபூர், நெல்லூர் ஆகிய நகரங்களில் இருந்து இருபது பதிப்புகளை வெளியிடுகிறது.