டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் அஸ்வின் 2–வது இடம்

ஐ.சி.சி. டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் 2–வது இடத்துக்கு முன்னேறினார். பேட்டிங் வரிசையில் விராட் கோலிக்கு சறுக்கலை சந்தித்து இருக்கிறார்.
ஐ.சி.சி. தரவரிசை

கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை துவம்சம் செய்தது. இது இந்தியாவின் 500–வது டெஸ்ட் என்பதால் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்திய வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கான்பூர் டெஸ்டில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 75, 25 ரன்கள் வீதம் எடுத்த நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் ஒரு இடம் அதிகரித்து 2–வது இடத்தை பிடித்துள்ளார்.
கோலிக்கு சறுக்கல்

இந்திய தரப்பில் டாப்–10 பட்டியலில் யாருக்கும் இடமில்லை. இதுவரை 8–வது இடத்தில் இருந்த ரஹானே 11–வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இதே போல் 9, 18 ரன்கள் எடுத்து சொதப்பிய இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது. அவர் 4 இடங்கள் சரிந்து 20–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில், ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்து தந்த முதல் இந்திய ஜோடி என்ற சிறப்பை பெற்ற தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் மற்றும் புஜாரா இருவரும் தலா 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 16–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ரோகித் சர்மா 52–வது இடத்திலும் (2 இடம் உயர்வு), லோகேஷ் ராகுல் 57–வது இடத்திலும் (5 இடம் இருக்கிறார்கள்.
அஸ்வின் 2–வது இடம்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் (878 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். கான்பூர் டெஸ்டில் 10 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 12 தரவரிசை புள்ளிகள் கூடுதலாக பெற்று 3–வது இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு (மொத்தம் 871 புள்ளி) வந்துள்ளார். ஸ்டெயினுக்கும், அஸ்வினுக்கும் இடையே 7 புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளது.

அடுத்த டெஸ்டிலும் அஸ்வின் இதே போன்று அசத்தினால், 2–வது முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறுவதை தடுக்க முடியாது. ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் உயர்ந்து 7–வது இடத்தை பிடித்துள்ளார். இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் முறையே 21, 25, 30 இடங்களை பெற்றுள்ளனர்.
ஆல்–ரவுண்டரில் ஆதிக்கம் செலுத்துவது யார்?

டெஸ்ட் ஆல்–ரவுண்டர்களின் தரவரிசையில் அஸ்வின் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அஸ்வின், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 10 விக்கெட்டுகளுடன் 40 ரன்களும் எடுத்தது கவனிக்கத்தக்கது. ஆல்–ரவுண்டர் வரிசையில் மொத்தம் 450 புள்ளிகள் பெற்றிருக்கும் அஸ்வினுக்கு இது சிறந்த புள்ளி எண்ணிக்கையாகும்.

கான்பூர் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளும், 92 ரன்களும் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்ற ரவீந்திர ஜடேஜா ஆல்–ரவுண்டர் தரவரிசையில் 5–வது இடத்தில் இருந்து 3–வது இடத்துக்கு (292 புள்ளி) எகிறியுள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். வங்காளதேசத்தின் ஷகிப் அல்–ஹசன் 2–வது இடத்தில் (384 புள்ளி) இருக்கிறார்.
ஒரு வெற்றி தேவை

டெஸ்ட் அணிகளின் தரவரிசையை பொறுத்தமட்டில் தற்போது பாகிஸ்தானை விட மயிரிழையில் பின்தங்கி 2–வது இடத்தில் உள்ள இந்திய அணி, கொல்கத்தா டெஸ்டிலும் வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் முதலிடத்தை எட்டிப்பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்–10 பேட்ஸ்மேன்கள்

வரிசை வீரர் நாடு புள்ளி

1 ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலியா 906

2 வில்லியம்சன் நியூசிலாந்து 879

3 ஜோ ரூட் இங்கிலாந்து 878

4 அம்லா தென்ஆப்பிரிக்கா 847

5 யூனிஸ்கான் பாகிஸ்தான் 845

6 ஆடம் வோக்ஸ் ஆஸ்திரேலியா 802

6 டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா 802

8 வார்னர் ஆஸ்திரேலியா 772

9 அலஸ்டயர் குக் இங்கிலாந்து 770

10 மிஸ்பா உல்–ஹக் பாகிஸ்தான் 764

டாப்–10 பந்து வீச்சாளர்கள்

1 ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா 878

2 அஸ்வின் இந்தியா 871

3 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 870

4 ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து 836

5 ஹெராத் இலங்கை 831

6 யாசிர் ஷா பாகிஸ்தான் 806

7 ரவீந்திர ஜடேஜா இந்தியா 798

8 மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 792

9 வாக்னெர் நியூசிலாந்து 746

10 பிலாண்டர் தென்ஆப்பிரிக்கா 723

10 டிரென்ட் பவுல்ட் நியூசிலாந்து 723