கச்சத்தீவில் ஆலய திறப்பு விழாவில் தமிழக மீனவர்களுக்கு அனுமதி தர மத்திய அரசுக்கு கடிதம்

கச்சத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கச்சத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:

கச்சத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்தோணியார் கோவிலின் திறப்பு விழாவும், திருவிழாவும் வரும் 7-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது; இந்த விழாவில் தமிழகத்திலிருந்து 100 பேர் பங்கேற்க தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும்படி ராமேசுவரத்தில் உள்ள புனித ஜோசப் ஆலயத்தின் பங்குத் தந்தை சகாயராஜ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை ஆட்சியர், தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொள்வர்.

திறப்பு விழா: இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள அந்தோணியார் ஆலயத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழக மீனவர்களின் பங்கேற்பு என்பது அவர்களது உரிமையாகும். எனவே, இந்த ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்துக்குச் சென்று வருவதற்கான அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் அளிக்க வேண்டும்.

முன்னதாக, கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தை இடித்து புதிதாகக் கட்டப்போவதாக செய்திகள் வெளியானபோது, அந்தோணியார் ஆலயத்தை இந்தியா -இலங்கை இணைந்து கட்டமைக்க வேண்டும் என, தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மே மாதம் 14 -ஆம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதில், “கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயமானது, இந்திய மீனவர்களின் கலாசாரம் மற்றும் மதரீதியான பாரம்பரியத்தின் பகுதியாக விளங்குகிறது’ என முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.

கச்சத்தீவையும், அந்தத் தீவில் தமிழக மீனவர்களின் உரிமைகளையும் மீட்டெடுப்பது தொடர்பான பிரச்னையையும், முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசின் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு சென்று வருகிறார் என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.