பள்ளி மாணவியை பாலத்காரம் செய்ய முயற்சி செய்த ஆசிரியர் கைது

செய்யாறு அருகே, பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போதை ஆசிரியரை, கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த எரையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குமார், 51, என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அதே பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும், எட்டு வயது சிறுமி, அங்குள்ள கழிவறைக்கு சிறுநீர் கழிக்கச் சென்றார்.

அப்போது, குடிபோதையில் இருந்த ஆசிரியர் குமார், அங்கு சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே சிறுமி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு கிராம மக்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர் குமாரை சரமாரியாக தாக்கினர். செய்யாறு தாசில்தார் ரெஹானாபேகம், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

பின், செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் ஆசிரியர் குமாரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு அவரை கைது செய்தனர். மேலும், சிறுமியை செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளி ஆசிரியர், சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.