கர்நாடக மாநிலத்தின் பால் மற்றும் பொருட்களை புறக்கணிப்போம்: பால் முகவர்கள் சங்கம்

காவிரி விவகாரத்தை தொடர்ந்து, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் கன்னட வெறியர்களைக் கண்டிக்கும் விதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்கு வரும் பால் மற்றும் பொருட்களை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’காவேரி’  தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட கர்நாடக வாழ் தமிழரை 10-க்கும் மேற்பட்ட கன்னட வெறியர்கள் சூழ்ந்து கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இன்னும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வரும் மத்திய அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பல ஆண்டுகளாக காவேரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசிற்கும், கர்நாடக வாழ் தமிழர்களை தொடர்ந்து தாக்கி வரும் கன்னட வெறியர்களுக்கும் நமது எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் தமிழகத்தில் விற்பனை செய்ய கொண்டு வரப்படும் கர்நாடக அரசின் “நந்தினி” பால் மற்றும் பால் பொருட்களை நாளை (13.09.2016) முதல் பால் முகவர்கள் எவரும் கொள்முதல் செய்யாமல் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பி அனைவரும் புறக்கணிக்க வேண்டுகிறோம்.

மேலும் தமிழகத்திற்கு காவேரியை நிரந்தரமாக திறந்துவிடும் வரை கர்நாடகாவில் இருந்து வரும் எந்த ஒரு பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களை பால் முகவர்கள் அனைவரும் கொள்முதல் செய்யாமல் புறக்கணித்து தமிழக அரசின் ஆவின் மற்றும் தமிழகத்தின் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.