உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன? ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்துவதாக, கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கடந்த அக்டோபர் 4–ந் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்ற தி.மு.க.வின் கோரிக்கை ஏற்க முடியாது. அதே நேரம், இந்த தேர்தல் அறிவிப்பு அவசரகதியில், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

மேலும், அந்த உத்தரவில், ‘தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதத்துக்குள் நடத்தப்பட்டு புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்கவேண்டும். தற்போது அந்த சூழ்நிலை இல்லாததால், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்கவேண்டும். அதேபோல, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி, உரிய இடைவெளிவிட்டு வெளியிடவேண்டும். அதாவது டிசம்பர் 31–ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

ஆனால், டிசம்பர் 31–ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் விதமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீலை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் டிவிசன் பெஞ்ச், தேர்தல் ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடைவிதிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, தேர்தலை டிசம்பர் 31–ந் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று வக்கீல் கேட்டதால், விசாரணையை வருகிற 28–ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.