வானிலை ஆய்வு மையம்: 20 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் நம்பியிருந்த வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு பொய்த்துவிட்ட காரணத்தால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளையும் மக்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் அளவுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, வரும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும், என்பது தான் அந்த தகவல்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், “தாய்லாந்து அருகே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தை நோக்கி வரும். ஆனால் வலுப் பெறாது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை( ஒரு வாரம்) தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை மிதமான மழையாக இருக்கும். மிதமான மழை என்பது அதிக பட்சமாக 4 செ.மீ. வரையாகும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழை பெய்வதை இனிமேல் தான் உறுதி செய்ய முடியும். 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை தான் நிலவும்” என்று தெரிவித்துள்ளார்.