பெங்களூரில் பதற்றம்: தமிழ் பேச அச்சப்படும் தமிழர்கள்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள அதே பதற்றமான சூழ்நிலை தற்போது தமிழக – கர்நாடக எல்லையான அத்திபள்ளியிலும் ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இன்னும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேற்பார்வை குழுவினர் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவால் கன்னட அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்பதால், முன்னேச்சரிக்கையாக கர்நாடகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணியில் இருந்தே பெங்களூரில் பதற்றம் தொற்றிக் கொண்ட நிலையில், நகர் எங்கிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக எல்லையான அத்திபள்ளியில் உள்ள சோதனை சாவடி வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கு போலீஸ் அனுமதிக்கவில்லை என அங்குள்ள மக்கள் குற்றச்சாட்டு. வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் காவல் துறையினர் நேற்றிரவு முதல் பலத்த சோதனை செய்து வருகின்றனர். மக்கள் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஐடி நிறுவனங்களுக்கும் அதன்  ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை வழங்க அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும், அவர்களின் தொழில் ஸ்தாபனங்களும் காவல்துறை உயரதிகாரிகளின் நேரடி பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில் தற்போதைய சூழலில், பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ் பேசுவதில்லையாம்.