எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்திய வரைபடம்’!

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உடன்  இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “இந்தியாவின் பலம் மகளீரே’ , என்பதை உறுதி செய்யும் வகையில் பல்கலைக்கழக அடையாளம்பட்டு வளாகத்தில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மற்றும் கல்வி பயிலும் 4003 மகளீரை மட்டுமே வைத்து, திருமதி. லலிதா லட்சுமி சண்முகம் , நிர்வாக அறங்காவலர் அவர்கள் தலைமையில், பல்கலைக்கழக தலைவர் அருண்குமார் அவர்கள் முன்னிலையில் இந்திய வரைபடம் (மனித வரைபடம்) அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அதிகாரிகள், அலுவலர்கள் பார்வையாளர்களாக  கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மு. க. ஸ்டாலின் திருச்சியில் உண்ணாவிரதம் தொடங்கியது!

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 9 மாணிக்கு தொடங்கியது. எடப்பாடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் தாக்கப்பட்டார். அவரது சட்டை கிழிக்கப்பட்டது. பல உறுப்பினர்களுக்கு காயம் ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்த மு.க.ஸ்டாலின், மெரினாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதையடுத்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம் அருகிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீக் கட்சியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.

தர்மபுரி இளவரசன் தற்கொலை தான் செய்துள்ளார்: சி.பி.சி.ஐ.டி அறிக்கை

தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக, சி.பி.சி.ஐ.டி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். சி.பி.சி.ஐ.டியின் அறிக்கையை ஏற்று, வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன், வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

திவ்யா இளவரசனை பிரிந்து, தாயுடன் சென்ற நிலையில், கடந்த, 2013 ஜூலை, 4ல், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்னால் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய நிலையில் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இளவரசனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வந்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதை ஏற்று, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு, முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு மற்றும் எல்எல்ஏக்கள் ஆதரவு அதிகரிக்கும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டு பிரிவாக உள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளித்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள மன்னார்குடி கோஷ்டி அவர்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளது.

இருப்பினும் எம்எல்ஏக்கள் பலர் அங்கிருந்து தப்பி வந்து முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதியானதை அடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு மட்டுமின்றி, மேலும் பல எம்எல்ஏக்கள் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வரக்கூடும் என்பதாலும், தொண்டர்கள் வருவதாலும் இந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் 3 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.

மேலும் ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவரை வழக்கில் இருந்து நீக்க கோரியும் கர்நாடகா அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இதனிடையே இன்று நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இந்த வழக்கும் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்ததால் அவரை இவ்வழக்கில் இருந்து விடுவித்தது உச்சநீதிமன்றம். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய குற்றவாளிகள் 3 பேரும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு விவகாரம் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் 4 வாரத்துக்குள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் சசிகலா, இளவரசி, சுதாகரனை குற்றவாளிகள் என அறிவித்து ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளனர். மேலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியராஜன்

தமிழக முதல் அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருகிறார்.

ஆவடி தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவருமான மாஃபா பாண்டியராஜன், இதுவரை சசிகலா அணியில் இருந்தார். தற்போது தமிழக முதல் அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரவு தெரிவிக்க அவரை சந்தித்துள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேரில் சென்று தனது ஆதரவை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சசிகலாவை ஆதரித்து வந்த நிலையில் பாண்டியராஜன் திடீரென முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

சசிகலா ஆளுநரை சந்தித்த போது அவருடன் பாண்டியராஜன் இருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சசிகலா அணியில் இருந்த பாண்டியராஜன் ஓ.பி.எஸ். அணிக்கு தாவியுள்ளார். மேலும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என வாக்காளர்கள் ஊடகங்களில் வலியுறுத்தியதால் அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாவது: வாக்காளர்களின் எண்ணங்களை கேட்டு, அதிமுகவின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன். ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் அதிமுகவின் ஒற்றுமையை உறுதிப்படுத்த முடிவு செய்துள்ளேன் எனவும் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் தெரிவித்ததோடு தற்போது முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் முதல் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகும். மாஃபா பாண்டியராஜன் ஆதரவு அளித்துள்ளதால் முதல்வர் ஓ.பி.எஸ். அணி வெகு வேகமாக முன்னேறி வருகிறது.

போயஸ் தோட்டத்திற்கு வெளியே வித்தியாசமாக சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராப் பாடகி

அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்ட சசிகலாவுக்கு அக்கட்சியின் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர் தமிழக முதல்வராக தேந்தெடுக்கப்பட்டதற்கு, பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என்று சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், சென்னையை சேர்ந்த ராப் பாடகி ஒருவர், நேற்று இரவு வித்தியாசமான முறையில் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த சோபியா அஷ்ரப், என்ற அந்த ராப் பாடகி, தன்னோட குழுவினர் நான்கு பேருடன் இணைந்து நேற்று நள்ளிரவு, போயஸ் தோட்டத்திற்கு வெளியே, சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கோபமாக ராப் பாடல் ஒன்றை இசைத்து பாடியுள்ளார்.

”நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல” என்று கடும் கோபத்துடன் ராப் பாடலாக பாடிய அவர், அதை வீடியோவாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Link: https://www.facebook.com/sofia.ashraf/videos/vb.687369534/10155797410024535/?type=2&theater

ஓரின சேர்க்கை தொந்திரவுக்குள்ளன பள்ளி மாணவி தற்கொலை

ஓரின சேர்க்கை சகோதரிகளால் தொந்திரவுக்குள்ளன பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் கர்னலில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று நடத்தும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், அதே கல்வி நிறுவனம் நடத்தும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் தனது சகோதரியுடன், விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் மூத்த சகோதரி வெளியே சென்று விட்டு விடுதி அறைக்கு வந்து பார்த்த போது, அறையின் கதவு பூட்டப் பட்டிருந்தது. எவ்வளவு முறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், விடுதி காப்பாளரை அவர் அணுகியுள்ளார். பின்னர், காப்பாளரின் உதவியுடன் கதவு திறக்கப்பட்டுள்ளது. அங்கு, அவரது இளைய சகோதரி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பதை கண்டு கல்லூரியில் படிக்கும் மூத்த சகோதரி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சகோதரியிடம் இருந்து சில தகவல்களை பெற்றுள்ளனர். அதன்படி, தற்கொலை செய்து கொண்ட மாணவி, அதே கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஓரினச் சேர்க்கை சகோதரிகளான, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் அவரது சகோதரி உள்ளிட்டவர்கள் கொடுத்த தொந்திரவால் மன அழுத்ததிற்கு ஆளாகியிருந்ததாக தெரிய வந்துள்ளது.

ஆனால், இது போன்றதொரு புகார் எங்களுக்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. அதேசமயம், நாங்கள் புகார் அளித்தோம். அதன் பேரிலேயே, விடுதியின் அறையை மாற்றித் தந்தனர் என தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வேறு சில மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.