ஓட்டுநர்களால் ஓட்டுநர்களுக்காக ஓட்டுநர்களே முன்னெடுக்கும் குய்க் கால் டாக்ஸி

ஓட்டுநர்களால் ஓட்டுநர்களுக்காக ஓட்டுநர்களே முன்னெடுக்கும் ‘குய்க் கால் & ஆப் டாக்சி (Qik Call & AppTaxi ) யின் செயலி அறிமுக விழா சோழிங்கநல்லூர் அலாப்ட் ஓட்டலில் நடைபெற்றது. அதற்கான செயலியை இத்திட்டத்தின் நிறுவனரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான சுவ்ரோ கோஷ் மற்றும் இணை நிறுவனரும் முதன்மை இயக்க அதிகாரியுமான டாக்டர் ஜோசப் கமலேஷ் ஆகியோர் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.

இதுகுறித்து டாக்டர் ஜோசப் கமலேஷ் பேசும் போது ,

” இந்த குய்க் கால் அண்ட் ஆப் டாக்ஸி, ஊக்கமுள்ள டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். அவர்களின் உழைப்புக்கேற்ற வருமானத்தை எந்தப் பிடிமானமும் இல்லாமல் பெற்றுத் தரும்.

இந்தச் செயலியை நாங்கள் அவர்களுக்கு வழங்கும் போது மாதாமாதம் அவர்கள் எங்களுக்கான சந்தாத் தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இதை நாடு முழுக்க பயன்படுத்திக் கொள்ள முடியும். எங்கள் தொடர்பு எல்லை தாண்டியும் இது அவர்களுக்குப் பயன் தரும். இதற்கான தொகை மாதம் 2500 முதல் 3000 வரை மட்டுமே இருக்கும். இதைத் தவிர வேறெந்த கழிவுகளும் சேவைக் கட்டணமும் அவர்களுக்கு வராது.இப்போதெல்லாம் ஓட்டுநர்கள் 50,000 க்கு டாக்ஸி ஓட்டிவிட்டு கமிஷன் போக 30,000 தான் வீட்டுக்குக் கொண்டு போகிறார்கள். எங்கள் செயலியைப் பயன்படுத்துகிறவர்கள் 50,000 -த்தையும் முழுதாகக் கொண்டு செல்ல முடியும்.

இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப அவர்களும் எளிதாக ஓட்டும் படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு காரை வடிவமைத்து தருகிறோம். அவர்களும் பாதுகாப்புடன் நம்பிக்கையுடன் சம்பாதிக்க வகை செய்கிறோம். திருநங்கைகளுக்கும் இந்த உதவிகளை விரிவாக்க இருக்கிறோம். இதில் இணைந்தவர்களுக்கு குழு, குழுவாக செயலி இயக்கம் பற்றிய செய்முறைப் பயிற்சி அளித்து அவர்களின் கார்களைத் தரச் சோதனை செய்து எங்களுடன் இணைத்துக் கொள்வோம்.

இதுவரை 2000 பேர் எங்களுடன் இணைந்து இருக்கிறார்கள். இது 10,000 ஆனதும் பெரிய அளவில் அறிமுக விழா நடத்த இருக்கிறோம். இதனை நம் நாட்டிலேயே முதன் முதலாக நாங்கள் தான் அறிமுகம் செய்கிறோம். இதில் பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. காப்பீட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன. புதிதாகக் கார் வாங்க வங்கிக் கடனுக்கும் வழிகாட்டி உதவத் தயாராக இருக்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயம் காக்க விவசாயியை காக்க நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

நடிகர் அபி சரவணன் விவசாயிகளுக்கு ஆதவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’ எனும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

ஐல்லிக்கட்டு தடைக்கு எதிராக முதன்முதல் மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய ‘கேர் அண்ட் வெல்பேர்’ அமைப்பு நடிகர் அபிசரவணனுடன் இணைந்து ‘விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’ டெல்லியில் போராடிய விவசாயிகள் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடடனர்.

இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்களுடன் ‘சாயம்’ இயக்குனர் ஆண்டனி, ‘பளஸ் ஆர் மைனஸ்’ இயக்குனர் ஜெய் யசோத், எடிட்டர் கோபி, கவிஞர் மதுரா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகெணாடனர்.

போராட்டத்தில் ஒருங்கணைப்பாளர்கள் சிவா மற்றும் சிந்துராம், அபிசரவணன் மற்றும் ஆம்ஆத்மி சந்தரமோகன் போன்றோர் விவசாயிகளுக்கு ஆதவாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினார்.

மாலை ஐந்து மணிக்கு அனைவரும் மோர் குடித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

தேசதுரோக வழக்கு: வைகோ திடீர் கைது,15 நாள் சிறையிலடைப்பு!

தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். வைகோவை 15 நாட்கள் சிறையிலடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் நுழைய கனிமொழிக்கு தடை!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் திமுக-வுக்கு பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் அக்கட்சி உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம், செயல் தலைவர் என்ற கம்பீரத்துடன் தொடர்ந்து நடக்க ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.
அதிமுக-வின் கோட்டையாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி தற்போது ஆட்டம் கண்டுள்ளதை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கும் ஸ்டாலின், இந்த வெற்றி தனக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், என்ற முடிவிலும் இருக்கிறாராம். இதற்காக, அத்தொகுதியில் கனிமொழி பிரச்சாரம் செய்வதற்கு அவர் தடை விதித்துள்ளதாகவும், இதனால் கனிமொழி தரப்பு அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே டெல்லி விவகாரங்களை கவனிப்பதிலும் கனிமொழியை கழட்டிவிட்டுள்ள ஸ்டாலின், தற்போது தமிழக அரசியலிலும் கனிமொழியை ஓரம்கட்டி வருவதாக திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்.

மாநில அளவில் நடந்த அபாகஸ் போட்டியின் பரிசளிப்பு விழா!

தென்னிந்தியாவில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் ‘க்ளோபல் கிட்ஸ் அபாகஸ்’ எனும் கம்பெனி கடந்த 15 வருடங்களாக அபாகஸ் பயிற்சியை அளித்து வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த கம்பெனி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் தனது கிளைகளை கொண்டது.

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வருடா வருடம் மாணவர்களுக்கு அபாகஸ் போட்டி நடத்தி அதில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளித்து வருகின்றனர்.

2016-2017 வருடத்திற்கான ‘அபாகஸ் போட்டி’ தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டது. 10000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த 1200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கடந்த சனிக்கிழமை 11 மார்ச் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த இந்த விழாவில் ‘க்ளோபல் கிட்ஸ் அபாகஸ்’ நிர்வாகிகளான P.சுபப்ரியா, S.பார்த்திபன் மற்றும் V.N.மதன் ஆகியோர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் APJ. அப்துல் கலாமின் பேரன் APJMJ. ஷேக் தாவுத் மற்றும் சமூக ஆர்வலர் அப்துல் கனி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மார்ச் 12 ஆம் தேதி ஐந்தாவது முறையாக  நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா

‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் சார்பில் ஐந்தாவது முறையாக நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா, வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற இருக்கின்றது.

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்துகின்றனர். சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் BOFTA திரைப்பட கல்லூரி இணைந்து வழங்கும் இந்த விழா, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு கொண்டிருக்கும், ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் – இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா தலைமை தாங்கி நடத்துகின்றார்.

இந்த வருடம், ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருதை பெறுபவர், கர்நாடக மாநிலத்தை சார்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் – 106 வயதான ‘சாலுமரட திம்மக்கா’ ஆவார்.

பெண் சாதனையாளர் விருதுகளை பெறுபவர்கள்:

1. மீனாக்ஷி அம்மாள் – கேரளா – இந்தியாவின் மூத்த ‘களரிபயட்டு’ பெண் கலைஞர்
2. சாந்தி சௌந்தராஜன் – தமிழ்நாடு – ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண்மணி
3. நயன்தாரா – தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகி
4. சி வி திலகவதி – சென்னை – தென்னக ரயில்வேயில் முதல் பெண் ஓட்டுநர்
5. டி கே அனுராதா – பெங்களூர் – ISRO – முதல் பெண் இயக்குநர்
6. சுவேதா சுரேஷ் – சென்னை – சர்வதேச விசில் சாம்பியன்
7. நவநீதம் – திருவள்ளூர் – விவசாயி
8. வாஹித்தா ஷாஜஹான் – புதுச்சேரி – ஆட்டோமொபைல் நிபுணர்
9. விஜயஸ்ரீ – சென்னை – சமுக ஆர்வலர்

பாரவையற்றவர்களுக்கான சிறப்பு அங்கீகாரம் பெறுபவர்: பாடகி மற்றும் இசை கருவி வாசிக்கும் ஜோதி – சென்னை. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலர் இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வருடம் விருதுகளை பெற்ற சிலர்:

1. மிசைல் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்
2. பூஜா தாகூர் – (first woman to led the guard of honour to US President)
3. சுதா ரகுநாதன் – கர்நாடக பாடகர்
4. வசந்தகுமாரி – ஆசிய கண்டத்தின் முதல் பெண் ஓட்டுநர்
5. ரூபா தேவி – FIFA போட்டியின் முதல் பெண் நடுவர்
5. லக்ஷ்மி – ACID ATTACK SURVIVOR

“ஒவ்வொரு துறையிலும் இருக்கும் திறமையாளர்களை அடையாளம் கண்டு கொண்டு, அவர்களை கௌரவிப்பது தான் எங்கள் ‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் முக்கியமான குறிக்கோள். ‘Edupreneur Awards’ மற்றும் ‘Change Maker Awards’ போல இந்த ‘பெண் சாதனையாளார்களை கௌரவிக்கும் விழாவையும்’, சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு வருடா வருடம் நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. ‘Calimidi Namberumal Chetty’ தொண்டு நிறுவனத்தோடு இணைந்து, நாங்கள் வியாசர்பாடியில் உள்ள ‘சீர்ஸ் கேர்ள்ஸ் ஹோமை’ தத்தெடுத்து இருக்கின்றோம். இங்கு இருக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் படிப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு எங்களின் ‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பு பக்கபலமாய் இருக்கும்” என்று கூறுகிறார் ‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அரவிந்த் ஜெயபால்.

ஆர்.கே நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல்

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே நகர் காலியாக இருந்தது. உறுப்பினர் இறந்து 6 மாதத்திற்கு அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும்.

இந்த நிலையில், ஏப்ரல் 12 ஆம் தேதி ஆர்.கே நகர் இடைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படும். மார்ச் 27 ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி தேதியாகும். ஏப்ரல் 15 ஆம் தேதி வாக்கு எண்ணைக்கை நடைபெறும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்திய வரைபடம்’!

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உடன்  இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “இந்தியாவின் பலம் மகளீரே’ , என்பதை உறுதி செய்யும் வகையில் பல்கலைக்கழக அடையாளம்பட்டு வளாகத்தில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மற்றும் கல்வி பயிலும் 4003 மகளீரை மட்டுமே வைத்து, திருமதி. லலிதா லட்சுமி சண்முகம் , நிர்வாக அறங்காவலர் அவர்கள் தலைமையில், பல்கலைக்கழக தலைவர் அருண்குமார் அவர்கள் முன்னிலையில் இந்திய வரைபடம் (மனித வரைபடம்) அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அதிகாரிகள், அலுவலர்கள் பார்வையாளர்களாக  கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மு. க. ஸ்டாலின் திருச்சியில் உண்ணாவிரதம் தொடங்கியது!

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 9 மாணிக்கு தொடங்கியது. எடப்பாடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் தாக்கப்பட்டார். அவரது சட்டை கிழிக்கப்பட்டது. பல உறுப்பினர்களுக்கு காயம் ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்த மு.க.ஸ்டாலின், மெரினாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதையடுத்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம் அருகிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீக் கட்சியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.