தமிழகத்தில் மலிவு விலையில் சிவகாசி பட்டாசுகள்: செல்லூர் கே.ராஜூ

வெளிச்சந்தையைவிட 50 சதவீதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பட்டாசுகள் விற்பனை சூடு பிடித்து வருகிறது. அதன்படி, தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடியில்   கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்பனை- பாதுகாப்பு ஏற்பாடுகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் வெளிச்சந்தையைவிட 50 சதவீதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விற்பனை மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். சென்னையில் மட்டும் 20 இடங்களில் கூட்டுறவுத் துறை மூலம் பட்டாசு விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சுமார் ரூ.21 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டது என்றார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.