தமிழகத்திற்கு சொந்தமான காவிரி தண்ணீரை, கர்நாடகா தேக்குவதா: நல்லசாமி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் நிருபர்களிடம் பேசிய சங்கத்தின் செயலாளர் நல்லசாமி, “தமிழகத்திற்கு சொந்தமான காவிரி தண்ணீரை, கர்நாடகா அரசு தன் அணைகளில் தேக்கி வைப்பது கண்டனத்துக்குரியது. நமது தண்ணீரை கர்நாடக அணைகளில் தேக்கிவைத்து, அவர்கள் பாசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு போகத்திற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பொய்த்துவிட்டது.

தமிழகத்திற்கு, மாதாந்திர பங்கீட்டு முறையில், கர்நாடகம் காவிரி நீரை வழங்குகிறது. ஜூன், 10 டி.எம்.சி., ஜூலை, 34, ஆகஸ்ட், 50, செப்டம்பர், 40, அக்டோபர், 22, நவம்பர், 15, டிசம்பர், 8, ஜனவரி, 3, பிப்ரவரி, 2.5, மார்ச், 2.5, ஏப்ரல், 2.5, மே, 2.5 டி.எம்.சிக்கள் என்ற ஒதுக்கீட்டின்படி, கர்நாடக அரசு, காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குகிறது. தற்போது, கர்நாடக அரசு நீர்த்தேக்கங்ளை அதிகமாக கட்டியுள்ளது. அவற்றில், தமிழகத்திற்கு உண்டான தண்ணீரை தேக்கி வைப்பது ஏற்புடையதல்ல. அந்த அணைகளில் தேக்கிய தண்ணீரை வைத்து, கர்நாடக அரசு, ஒரு போகம் சாகுபடி செய்துள்ளது. தமிழகத்திற்கான தண்ணீரை, தினசரி, கர்நாடகா நீர்த்தேக்கங்களில் தேக்காமல், காவிரியில் திறந்து, அதை மேட்டூர் அணையில் தேக்கியிருந்தால், நீர் பங்கீட்டு தகராறு ஏற்பட்டிருக்காது. மாதாந்திர பங்கீட்டு முறையை தவிர்த்து, தினசரி பங்கீட்டு முறையை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அதன்மூலம், இரு மாநிலங்கள் இடையே உள்ள காவிரி பிரச்னையை தவிர்க்க முடியும். அரவக்குறிச்சியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், சங்கம் சார்பில் ரவி நயினார் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்

மாதம் தோறும் நீர் பங்கீட்டு முறையை மாற்றி அமைத்து, தினம் தோறும் நீர் பங்கீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே காவிரி நதி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். கோர்ட்டும், மத்திய மாநில அரசுகளும் இதனை கவனத்தில் கொண்டு, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு சொந்தமான நீரை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.