அடுத்த அதிரடிக்கு தயாரான வருமான வரித்துறை? முதல்வர் பன்னீரின் அடுத்த டார்கெட்? Tamil Nadu Chief Minister Panner Selvam Next Target on Chief Advisor?

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, ஜெ.,வின் விசுவாசியாகவும், உண்மை தொண்டனாகவும் இருந்தார். இதை ஜெயலலிதாவே பன்னீர் செல்வத்தின் மகன் திருமணத்தின் போது கலந்து கொண்டு பேசிய போது, ‘ராமர் வனவாசம் சென்றபோது அவருடைய செருப்பை அரியணையில் வைத்து ஆட்சி செய்தார் பரதன். இது இதிகாசத்தில் நடந்தது.

ஆனால், இந்த கலிகாலத்தில் நான் என் முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி வந்தபோது திருப்பிக் கொடுத்தார். நான் பதவியை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பப் பெறும்போது, ‘உங்களுக்குக் கொடுக்கத்தான் அம்மா காத்திருக்கிறேன்’ என சொன்னார். உலக அரசியலில் இப்படி ஒரு நிகழ்வை உங்களால் பார்க்க முடியாது எனப் புகழ்ந்தார் ஜெயலலிதா.

அப்படி எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர் ஓ.பி.எஸ். அப்படி ஜெயலலிதா இருந்தவரை சாதுவாகவே இருந்த முதல்வர் டெல்லி போய் பிரதமரைப் பார்த்து வந்த பின்னர் புயலாக மாறி விட்டார்.

டெல்லி சென்று மோடியை சந்தித்து விட்டு தமிழகம் வந்த மறுநாளே ராம்மோகன் ராவ் வீட்டில் அதிரடி ரெய்டும் பதவி நீக்கமும் செய்யப்பட்டார். மேலும் ரெட்டி வீடுகளிலும் தொடர்ந்து அதிரடிகள் தொடர்கிறது. ஒரு விஷயத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். நல்ல ஆட்சிக்கு யார் யாரெல்லாம் தடையாக இருந்தார்களோ, இருக்கிறார்களோ, அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்களோ அவர்களை தடையறத் தாக்குவது, தடைகளை உடைப்பது.

ஜெ., உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது மேல் நிலை அதிகாரிகளில்சில கருப்பு ஆடுகள் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். சில பண முதலைகளுக்கு உடந்தையாக பல பைல்கள் கையெழுத்தாகியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் இடைக்கால முதல்வர் பன்னீரை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை, முதல்வர் என்ற மதிப்பு மரியாதை இல்லாமல் மன்னார்குடி மாஃபியா கும்பலால் மனஉளைச்சலுக்கு ஆளானார் பன்னீர்.

மேலும், கட்சி சம்பந்தமாகவும், அரசு சம்பந்தமாக இருந்தாலும் நேராக மருத்துவமனைக்கு சென்று சசிகலாவிடம் தான் அனுமதி பெறுவது அரசு முடிவுகளை எடுப்பது என நிழல் முதல்வராகவே சசிகலா நடத்தி இருக்கிறார்கள். இந்த விஷயம் தான் முதல்வரை அதிகம் உறுத்தியுள்ளது என்கிறார்கள். இப்போது முதல்வருக்கு எந்த தடையும் இல்லை.

பிரதமரின் ஆசியும் ஆதரவும் இருக்கிறது, மோடியின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார் பன்னீர். யாருக்கும் குனிந்து நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே, தடைகளை உடைப்பதிலும், கொழுத்த முதலைகளையும் ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்துள்ளார்.

அவரின் அடுத்த குறி பணி நீட்டிப்பு செய்யப்பட்டு ஜெ., வின் செல்லப் பிள்ளையாகவும், அதிகார மையமாகவும் இருந்த அதிகாரி தான் என்று கோட்டை வட்டாரத்தில், கோட்டை அதிகாரிகள் கதி கலங்கிப் போய் இருப்பதாக கூறப்படுகிறது.