UTV & திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் இவன் வேறமாதிரி

‘கும்கி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு அதே திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் அதே நாயகன் விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘இவன் வேற மாதிரி’ .கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ‘எங்கேயும் எப்போதும்’ எம்.சரவணன்.

படத்தைப் பற்றி இயக்குநர் சரவணன் கூறும் போது–

“பொதுவாக ஒருவனை இவன் வேற மாதிரி என்றால் நெகடிவாக–எதிர்மறையாக கூறுவதற்கு மட்டுமே சொல்வார்கள். ஆனால் நம் நாயகன் வேற மாதிரி. அதாவது நல்லவன்.

எங்கேயும் எப்போதும் ஒரு தப்பு நடந்தாலும் அதுபற்றி ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கும். அவரவர் சொல்வது வேறுபடும். இதற்கு காவல்துறைதான் காரணம்.,அரசுதான் காரணம், அரசியல்வாதிதான் காரணம் இப்படித்தான்  கூறப்படும். நமக்கு இதில் என்ன தொடர்பு, பொறுப்பு இருக்கிறது? நம்மால் ஆக வேண்டியது என்ன என்று யாரும் யோசிப்பது இல்லை. அப்படி யோசிப்பவன், செயல் படுபவன்தான் நம் நாயகன். அதனால்தான் இவன் வேற மாதிரி.”என்கிறார்.

படத்தின் நாயகன் விக்ரம்பிரபு.நாயகி புதுமுகம் சுரபி, டெல்லிக் காரர். வில்லன் வம்சி. இவர் ‘தடையறத் தாக்க’ படத்தில் மிரட்டியவர். போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராமன், வருகிறார். இந்த நான்கு முக்கிய பாத்திரங்களை மையமாக வைத்தே கதை பயணிக்கிறது.

விக்ரம் பிரபு தன்னை முழுமையாக ஒப்படைத்து ஒத்துழைத்தாராம்.கதாநாயகி தேர்வுக்கு வந்த சுரபி, ‘நான் ஷூட்டிங் பார்த்ததே இல்லை’. என்று கூறி அருகில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பை போய் வேடிக்கை பார்த்தாராம். சினிமாவுக்கும் அவருக்கும் அவ்வளவு தூரம்.

நாயகி சுரபிக்கு தமிழ்தெரியாது என்பதால் நடிக்க வேண்டிய காட்சிகள்–வசனங்கள் கொடுக்கப் பட்டு ஒரு மாதம் பயிற்சி யளிக்கப்பட்ட பின்னர்தான் படப்பிடிப்பு சென்றுள்ளார்கள்.

இது முழுக்க ஒரு நல்ல கதையைச் சொல்லும் ஆக்ஷன் லவ் ஸ்டோரியாக இருக்கும்.விஸ்காம் படித்துவிட்டு வேலைதேடும் விக்ரம்பிரபு, கல்லூரியின் கடைசியாண்டு மாணவி சுரபி இவர்களுக்குள் நிகழும் காதல் கதைக்குள் உண்டு.

கதை அனுமதிக்கும் வகையில்தான் நடிகர்கள்,தொழில் நுட்பம், லொக்கேஷன் எல்லாமும் இருக்கும். முழு திரைக்கதையும் தயாரிக்கப் பட்டு ‘பைண்ட்’ செய்யப் பட்ட பிறகே படப்பிடிப்பு தொடங்க பட்டதாம். அந்தளவுக்கு திட்டமிடப்பட்டு எல்லாம் நடந்துள்ளது.

இது முழுக்க சென்னையில் நடக்கும் நகரப் பின்னணிக்கதை. பெரும்பாலான படப்பிடிப்பும் சென்னையிலேயே நடந்துள்ளது. சில காட்சிகளுக்கு மட்டும் பாண்டிச்சேரி சென்று வந்துள்ளார்கள். இதுவரை படப்பிடிப்பு 90 நாட்கள் நடந்துள்ளது. படக்குழு பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வெளியூர் செல்லவிருக்கிறது.

இப்படத்தின் மூலம் கும்கி விக்ரம் பிரபுவை ‘இவர் வேற மாதிரி’ என்று மாற்றிக்காட்டியுள்ளதாக நம்பும் சரவணன், ஒளிப்பதிவாளர் சக்தியையும் சண்டை இயக்குநர் ராஜசேகரையும் இப்படம் உயரத்தில் ஏற்றிவைக்கும் என்றும் கூறுகிறார்.

‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சத்யாதான் இப்படத்துக்கும் இசை. ஆறு பாடல்கள். கலை இயக்கம் விஜய முருகன். படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்.

திருப்பதி பிரதர்ஸ் இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம். இதில் படம் இயக்குவது தனக்கு மிகவும் சௌகர்யமாக இருப்பதாகவும். தங்களைப் போன்ற புதுமுகமான .சிறிய படக்குழுவை சுதந்திரம் கொடுத்து நடத்துவது மறக்க முடியாத மகிழ்ச்சி அனுபவமாக இருப்பதாகவும் கூறுகிறார் இயக்குநர் எம். சரவணன்.