சென்னையில் பிரபல தொலைக்காட்சி நடிகை சபர்ணா மர்மமான முறையில் கொலை!

சென்னையில் தொலைக்காட்சித் தொடர் நடிகை மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் தளத்தில் வசிப்பவர் சபர்ணா (29). இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். மேலும், பல தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில், சபர்ணா வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, பக்கத்து வீட்டினர், மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து, அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் சபர்ணா மர்மமான முறையில் ஆடைகள் இன்றி அழுகிய நிலையில் கிடப்பதையும், இடது கையில் வெட்டுக் காயமும் இருந்தது. உடனே போலீஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சபர்ணா வீட்டில் இருந்து, ஒரு டைரியை போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சபர்ணா மர்மச் சாவுக்கு காரணமானவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.