பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக், திபா கர்மாகர், ஜித்து ராய்க்கு கேல்ரத்னா விருது

ரியோ ஒலிம்பிக் சாதனை வீரர்களான பி.வி.சிந்து (பாட்மிண்டன்), சாக்‌ஷி மாலிக் (மல்யுத்தம்), திபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஜித்து ராய் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோருக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கினார்.

இன்று (திங்கள் கிழமை) புது டெல்லியில் நடைபெற்ற விளையாட்டு விருது வழங்கும் விழாவில், வீரர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

திபா கர்மாகரின் பயிற்சியாளர் விஷ்வேஷ்வர் நந்தி துரோணாச்சாரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 15 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதும், 3 வீரர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டன.

பாட்டியாலா பஞ்சாபி பல்கலைக்கழகத்திற்கு மவுலானா அபுல்கலாம் ஆசாத் டிராபி (2015-16) வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள், பதக்கம் மற்றும் ரூ.7.5 லட்சம் தொகையைப் பரிசாகப் பெற்றனர். அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருது பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக் முடிந்தது அடுத்த ஒலிம்பிக் ஜப்பானின் நடைபெறுகிறது

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது.

அடுத்த ஒலிம்பிக் 2020 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் நடைபெறும், என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச், அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மரக்காணா மைதானத்தில் ஏற்றப்பட்டிருந்த ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது. அணிவகுப்பின்போது இந்தியாவின் சார்பில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கொடியேந்திச் சென்றார்.

பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பு பிரச்சினை என்று பல சவால்களுக்கு இடையே பிரேசில் அரசு வெற்றிகரமாக ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் உசேன் போல்டு

பீஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 6 தங்கப் பதக்கங்களை வென்ற உசேன் போல்டு, தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 3 தங்கப் பதக்கங்களை வென்று, ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 9 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற உசேன் போல்டு, இன்று நடைபெற்ற 4X100 ஓட்டத்திலும் தங்கம் வென்றார்.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை உசேன் வென்றார்.

இதே தூரத்தை 37.60 வினாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் வெள்ளிப் பதக்கத்தையும், 37.62 வினாடிகளில் கடந்த அமெரிக்க வீரர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

ஒலிம்பிக் ஹாக்கி அர்ஜெண்டினா தங்கம் வென்றது

ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் அர்ஜெண்டினா தங்கப் பதக்கம் வென்றது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை எதிர்க்கொண்ட அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

ஒலிம்பிம் போட்டி வரலாற்றில் ஹாக்கி தொடரில் அர்ஜெண்டினா தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக 3 வது இடத்திற்கான போட்டியில், நெதர்லாந்தை வீழ்த்தி ஜெர்மனி வெண்கலப் பதக்கம் வென்றது.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார் சிந்து

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

அரையிறுதியில் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதிப்படுத்திய சிந்து, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீராங்கனை கரோலினா மரினுடன் மோதினார். இதில் சிம்பு தங்கம் வெல்வார் என்று இந்தியாவே எதிர்ப்பார்த்த நிலையில், 19-21, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 4-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சிந்து.

துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (2004, ஏதென்ஸ்), விஜய் குமார் (2012, லண்டன்), மல்யுத்த வீரர் சுஷீல் குமார் (2012 லண்டன்) ஆகியோர் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மற்ற இந்தியர்கள் ஆவர்.

இதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-ஆவது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்துவுக்கு கிடைத்துள்ளது. இதுதவிர இளம் வயதில் (21) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் சிந்து நிகழ்த்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு, ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வீடுகள், பணம், கார்கள் பரிசு மழையில் நனையும் சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.

வி.சிந்து, சந்தோஷ மழையில் நனைகிறார் என்பதைவிட பரிசு மழையில் நனைகிறார், என்றே சொல்ல வேண்டும்.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள சிந்துவுக்கு மாநில அரசுகளும், பல தனியார் நிறுவனங்களும், விளையாட்டு அமைப்புகளும் பல்வேறு பரிசுகளை அறிவித்துள்ளது.

அவருடைய சொந்த மாநிலமான தெலங்கானா சார்பில் அவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மனையும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்), சிந்துவுக்கு ரூ.50 லட்சமும், பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.10 லட்சமும் வழங்குகிறது.

மத்தியப் பிரதேசத்தின் சார்பில் சிந்துவுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்க தலைவர் சாமுண்டீஸ்வரநாத், பி.எம்.டபிள்யூ காரை சிந்துவுக்கு பரிசளிக்கிறார். இவர், லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா வெண்கலம் வென்றபோது அவருக்கும் கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் எஸ்யூவி கார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயவாடாவைச் சேர்ந்த பிரபல தங்க நகைக் கடை, சிந்துவை விளம்பரத் தூதராக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சிந்துவுக்கு வீடு பரிசளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.வி.சிந்து வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் அரையிருதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.

வி.சிந்து வெற்றி பெற்றதன் மூலம், அவருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹாராவுடன் மோதிய பி.வி.சிந்து, முதல் செட்டில்லேயே ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தினார். இதன் மூலம் 11-6 என முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் ஜப்பான் வீராங்கனை சிந்துவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் 17-18 என ஒரு புள்ளி வித்தியாசத்தில்தான் ஜப்பான் வீருாங்கனை பின்தங்கியிருந்தார்.

பின்னர் சிந்து சிறப்பாக விளையாடி 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டில் 3-0 என சிந்து முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் தொடர்ச்சியான ஜப்பான் வீராங்கள் புள்ளிகள் பெற்று 4-3 என முன்னிலை பெற்றார். அதன்பின் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினார்கள். ஜப்பான் வீராங்கனையின் சிறப்பான ஆட்டத்தை முறியடித்து சந்திது 11-10 என முன்னிலையில் இருந்தார்.

சிந்து தொடர்ந்து 10  புள்ளிகள் பெற்றார். இதனால் 21-10 என 2-வது செட்டை எளிதில் கைப்பற்றி 2-0 என வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆகவே, சிந்து வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு ரியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது பதக்கம் உறுதியாகியுள்ளது.

200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் உசேன் போல்ட்

உலகின் அதிவேக மனிதர் என்று வர்ணிக்கப்படும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதை தொடர்ந்து, 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றுள்ளார்.

பந்தய தூரமான 200 மீட்டரை 19.78 வினாடிகளை ஓடிகடந்த உசேன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு  தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசேன் போல்ட், இன்று நடைபெறும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பீஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், 58 கிலோ எடை பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவுடன் மோதினார். இப்போட்டியில் அவர் 7-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாக்‌ஷி மாலிக் வென்ற பதக்கத்தின் மூலம், ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. தற்போது பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 70 வது இடம் கிடைத்துள்ளது.

ரியோ ஒலிம்பிக் ஜிம்ஸ்னாஸ்டிக் போட்டியில் இந்தியா இறுதி சுற்றுக்கு தகுதி

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி வில்வித்

தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, கோல்ப், ஜிம்னாஸ் டிக், ஜூடோ, துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம், நீச்சல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்று 118 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்குக்கு சென்று உள்ளனர்.

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனையான தீபா கர்மகர் பங்கேற்றுள்ளனர். திரிபுராவை சேர்ந்த 22 வயதான அவர் ஆர்டிஸ்டிக் தனி நபர் ஆல்ரவுண்டர் பிரிவில் கலந்து கொண்டார்.

இதன் வால்ட் பிரிவில் தீபா கர்மகர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்தார். அவர் தகுதி சுற்றில் 14.850 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் வால்ட் தனி நபர் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் மோதும் இறுதிப் போட்டி 14-ந்தேதி நடக்கிறது. ஒட்டு மொத்த பிரிவில் அவரால் இறுதி சுற்றுக்கு முன்னேற இயலவில்லை. அவர் 51.665 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தார்.