தமிழக அவசர சட்டத்திற்கு எதிராக பீட்டா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

வரலாறு காணாத போராட்டத்தின் மூலம் தமிழர்கள் மீட்டெடுத்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டது பீட்டா.

தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்திற்கு எதிராக பீட்டா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்த தமிழக அரசு, பின்னர் நிரந்தர் சட்டமாக்கும் வகையில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றியுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இம்மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது.

பீட்டா சார்பில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார் என்று கூறப்படுகிறது.

பீட்டா இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

நடிகர் கமல் ஹாசனுக்கு பதில் அளித்த பீட்டா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெடித்த கலவரம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அப்போது பீட்டா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பீட்டா அமைப்பை தடை செய்யாமல், அவற்றின் நடவடிக்கையை ஒழுங்குப் படுத்தலாம், என்று கூறியதோடு, இங்கு, ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விடுத்து, அமெரிக்காவில் காளைகள் மீது அமர்ந்து நடைபெறும், ‘புல் ரைடிங்’ போன்ற விளையாட்டுகளை தடை செய்ய, பீட்டா முயற்சிக்க வேண்டும், என்றும் கூறினார்.

இந்த நிலையில், கமலின் கருத்துக்கு பதில் அளித்து பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா, ”’பீட்டா இந்தியா’ என்பது, இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு. இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பதே, இதன் குறிக்கோள். ‘பீட்டா யு.எஸ்.,’ அமைப்பு, அதற்காக, அமெரிக்காவில் போராடி வருகிறது. கமல் கூறிய விளையாட்டு, அங்கு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது: அபிஷேக் சிங்வி

இளைஞர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் வெற்றியாக, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம், நிரந்தர சட்டமாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, பிப்ரவரி மாதம் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், பீட்டா தமிழகம் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பீட்டா சார்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி ஆஜராகிறார். அவர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ”தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் இரு கருத்துகளுக்கும் எதிராகவும் உள்ளது தமிழக அரசின் சட்டம். மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கை வெளியிட்ட வழக்குக்கும் இதற்கும் தொடர்பும் இல்லை. அதேபோல் பீட்டாவுக்காக நான் ஆஜராவது என்பது தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர் என்கிற அடிப்படையில்தான். இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அவனியாபுரத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி

பிப்ரவரி 1 ஆம் தேதி அலங்காநல்லூரிலும், 2 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவனியாபுரத்தில் 5 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஊர் விழாக் கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.

அவனியாபுரம் கிராம விழா கமிட்டியினர் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு: ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி கொடுத்த மாரியப்பன்

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தனது பதக்கத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

உலகை திரும்பி பார்க்கச் செய்த வரலாற்று புரட்சிகளில் சென்னையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமும் இடம் பிடித்து விட்டது. குழந்தைகள், சிறியவர்கள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று அனைவரும் பங்கேற்று வரும் இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தம்முடைய பதக்கத்தை திருப்பித் தருவதாக அறிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்: ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் சேவாக்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று முன் தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் தற்போது ஒட்டு மொத்த தமிழகத்தில் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் பரவியுள்ளது.

மும்பை தாராவியில் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் அல்லாத பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் கிரிக்கெட் வீரர் முகமது கைப் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் அமைதி வழியில் செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அமைதி வழியை தொடருங்கள். இந்த அறப்போராட்டம் எல்லோருக்கும் பாடம், என்று தெரிவித்துள்ளனவர், தமிழகத்தில் உச்ச நீதிமன்றத்தை மதித்தபடியே, நடைபெறும் அமைதி போராட்டம் பற்றிய போட்டோ மீம் ஒன்றை ரீடிவிட் செய்துள்ளார். அந்த மீமில் தேசிய ஊடகங்கள் இப்போராட்டத்தை புறக்கணிப்பது குறித்து, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை தமிழர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது பிற மாநிலத்தைச் சேர்ந்த பிரபலங்களும் குரல் கொடுப்பதால், இந்த போராட்டம் இனி சர்வதேச அளவில் பேசப்படும் அளவுக்கு வீரியம் அடைந்துள்ளது.

நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்: நயந்தாரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகை நயந்தரா, “நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழகத்தை ஒலிக்கச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

நயந்தாரா சார்பில், அவரது மக்கள் தொடர்பாளர் மூலமாக இன்று வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளையதலைமுறையின் பலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இந்த தருணத்தில் பிறப்பால் இல்லா விட்டாலும் , உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலை நிமிர வைக்கிறது.

இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமை பட வைக்கிறது.

நான் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிட்டாலும், எனக்கு ஒரு அங்கீகாரதத்தையும், அடையாளாத்தையும் பெற்று தந்தது இந்த தமிழ் மண்ணும், தமிழ் மக்களும் தான். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன். அவர்களுடன் என்னுடைய குரலும் இணைந்து நம் கலாச்சாரத்துக்கு எதிரான அந்த அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு நம் பலத்தை காட்டும் என நம்புகிறேன். அவர்களின் பொய்யான வாதத்தை உண்மை என்று நம்பிய நமது நீதி மற்றும் அரசு துறைகளுக்கும் நம் குரல் கேட்க்கும் என நம்புகிறேன்.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எடுத்து இருக்கும் இந்த உணர்ச்சிகரமான நடவடிக்கை, நிச்சயமாக தமிழக கலாச்சாரத்தின் பெருமையை உலகமெங்கும் ஒலிக்கச் செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு, தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சராசரி குடிமகளாக நான் அவர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகின்றேன்.

இவர்களின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான ‘ஜல்லிக்கட்டை’, எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாடெங்கும் ‘ஜல்லிக்கட்டு’ முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு: காவல் துறையினருடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள், உலக அளவில் பிரபலமாகி வருகிறது.

தமிழகத்தை தாண்டி, தேசிய அளவில் பரவியுள்ள இப்போராட்டம் வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்று வரும் நிலையில், இன்று கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருவதால், போராட்டத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று இரவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய தமிழக அமைச்சர்கள், அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்ட அமைப்பை தடை செய்வது குறித்தும் அறிக்கை வெளியிடுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் போலீஸ் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷ்னர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் போராட்டத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த ஆலோசனையின் போது முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

மவுன போராட்டம் நடத்திய சிம்புவை பாராட்டிய சீமான்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மவுன போரட்டம் நடத்திய நடிகர் சிம்புவை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பாராட்டினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தனது வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்தினார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தாரும் மவுனமாக நின்றிருந்தார்கள். இவர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் இயக்குனர் ராமும் கலந்து கொண்டார். சிம்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகள், அலுவலகங்கள் முன்பு மவுன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை சந்தித்து பாராட்டினார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தினோம்.

தடையை மீறி நடத்தியதால் எங்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவோம். படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு கதையை சொல்லக்கூடாது என்பது போன்று நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்த உள்ள இடங்களின் விபரங்களை தெரிவிக்க மாட்டோம். நாங்கள் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டை நடத்துவோம். சட்டத்தை மதித்து கைதாகுவோம். கைதாவதை மகிழ்ச்சியாக நினைக்கும் கூட்டம் நாங்கள். கைதாவதை வரவேற்கிறோம் என்றார்.

ஜல்லிக்கட்டுக்காக மவுன போராட்டம் நடத்திய சிம்புவிற்கு குவியும் பாராட்டுக்கள்

தமிழ் தமிழ் கலாச்சாரம் என கூறிக்கொள்ளும் தமிழ் திரையுலகம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எதுவுமே செய்யாத நிலையில் தனி ஒரு நடிகராக நடிகர் சிம்பு களத்தில் குதித்து போராட்டத்தை அறிவித்து அதை நடத்தியும் காண்பித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை , இளைஞர்களை கவர்ந்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக நடை பெறாத நிலையில் மூன்றவது ஆண்டாக தடை நீடிக்கும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வலுத்து வருகிறது.

தமிழகத்தில் மக்கள் முக்கியமாக மதிப்பது அரசியல் , அந்த அரசியலுக்கு தங்களை தலைமை தாங்கி வழி நடத்துவார்கள் என சினிமாகாரர்களை நம்புகின்றனர். அந்த அளவுக்கு சினிமாக்காரர்களை தங்களை வழி நடத்த வந்தவர்களாக எண்ணி போற்றுகின்றனர்.

ஆனால் சினிமாக்காரர்கள் காசு சம்பாதிக்க எதையாவது செய்வதும் , கலாச்சார சீரழிவு பற்றி கவலைப்படாததும் மக்களை , ரசிகர்களை ஏமாற்றி உணர்ச்சிகரமான நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறார்கள். மக்களுடைய இயல்பான போராட்டத்தில் சாதாரணமாக இணைவதே இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு.

இவர்கள் படம் ஓட ரசிகன் வேண்டும் , கட்டிடம் கட்ட ரசிகன் நிதி தரணும் ஆனால் அவர்கள் பிரச்சனையில் சுத்தமாக ஒதுங்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கருத்து கூட சொல்லமாட்டோம் என மவுனம் காக்கும் மேதாவிகள் தேர்தல் நேரத்தில் எதாவது கட்சியில் ஆதாயம் பெற்று ஓட்டு கேட்டு வரும் காட்சியை பார்க்கிறோம்.

காவிரி பிரச்சனை , பண மதிப்பிழப்பு பிரச்சனை போன்ற விவகாரங்களில் வாயே திறக்காத கலையுலகத்தினர் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கும் , தமிழக விவசாயத்தின் ஆதாரமான காளைகளை அழிக்கும் முயற்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டுவரப்பட்டுள்ளது குறித்தும் கனத்த மவுனம் காக்கின்றனர்.

இதை எதிர்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் மாணவர்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வர சில நடிகர்கள் தவிர்த்து ஒட்டு மொத்த கலையுலகமும் ஓரங்கட்டி நின்று வேடிக்கை பார்க்கின்ற நிலை தான் உள்ளது. ஆதரித்து குரல் கொடுத்த கமல் ,சூர்யா போன்றோர் மத்தியில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி உரக்க குரல் கொடுத்து , அதற்கான போராட்டம் நடத்த வலுவான குரல் கொடுத்த சிம்பு இன்று இளைஞர்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்.

துணிந்து போராட்ட அறிவிப்பு வெளியிட்ட சிம்புவுக்கு ஆதரவாக இணைய தளத்தில் லட்சக்கணக்கில் லைக்குகள் , ஷேர் கள் கமெண்டுகள் என தொடங்கி இன்று முழுதும் சிம்புவும் ஒரு கவனிக்கப்பட வேண்டிய நபராக இருந்தார்.

5 மணிக்கு சிம்புவின் அழைப்பை ஏற்று அவரது இல்லத்தின் முன்பும் , தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இளைஞர்கள் திரண்டு நின்று தங்கள் போராட்டத்தை நடத்தினர். இது சிம்புவுக்கு மிகப்பெரிய மரியாதையை ஐடி துறையில் பணியாற்றும் மற்றும் கிரமப்புர நகர் புற இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் சிம்பு உச்சத்தை தொட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் படம் இல்லாமல் இருந்த என்னை படம் வெளியானவுடன் தூக்கி நிறுத்திய தமிழக மக்களுக்காக அவர்களில் ஒருவனாக நீதி கேட்கிறேன் என்று கூறிய சிம்புவின் வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்தாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது சிம்புவுக்கு கிடைத்த வெற்றி . இதன் மூலம் பீப் சாங் பிரச்சனையில் தன் மேல் விழுந்த கரையை சிம்பு துடைத்து கொண்டார் என்றார் கல்லூரி மாணவர் ஒருவர். அதுசரி சினிமாவில் ஸ்டண்ட் அடிப்பது போலவே பேட்டிகளிலும் ஸ்டண்ட் அடித்த நடிகர் சங்க நாயகர்கள் எங்கே நாசர் மட்டும் தான் தென்படுகிறார் என்று கேட்டார் ஒரு இளைஞர். இளைஞர்கள் , மாணவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள் ஆனால் அனைத்தையும் கவனிப்பார்கள் என்பதற்கு இந்த சம்பவங்கள் கேள்விகள் அனைத்தும் சாட்சி.