2ஜி வழக்கு விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு: சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கனிமொழி ஆஜர்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடந்து வருகிறது.

இதே போல அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் இறுதி வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் இந்த இரண்டு வழக்குகள் சம்பந்தமாகவும் கனிமொழி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு வருகிற 25-ந் தேதிக்கும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 1-ந் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு:-

7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைத்துள்ள சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என்பதை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 11-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

ரெயில்வே, தபால் துறை உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன.

மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

இந்த நிலையில் நேற்று மீண்டும் மத்திய அரசு கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள், ராஜ்நாத் சிங்கை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்மட்ட குழுவை விரைவில் அமைத்து தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன. இந்த கோரிக்கைகள் குறித்து ஒரு குழு அமைப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து வேலைநிறுத்தத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பு நேற்று இரவு அறிவித்தது.
குளச்சலில் வர்த்தக துறைமுகம் வருவது உறுதி

குளச்சலில் வர்த்தக துறைமுகம் வருவது உறுதி:

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது, இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 25 ஆயிரம் கோடியாகும்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத் தில் இனையம் அருகே குளச்சல் துறைமுகம் கட்ட கொள்கையள வில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார் மேலும் இந்த திட்டத்தின் மூலம், 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

துறைமுகம் வராமல் தடுப்பதற்கு அப்பாவி மீனவர்களை திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தூண்டி விடுவதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார்.

துறைமுகத்தை வரவிடாமல் தடுக்க, திட்டமிட்டு நடத்தப்பட்ட தீய சக்திகிகளின் முயற்சிகளை பொருட்படுத் தாமல், மத்திய அரசு உறுதியாக முடிவு எடுத்துள்ளது, இதற்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

துறைமுகப் பணிகள் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தொடங்கும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இதற்கான பணிகள் மூன்று கட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது, முதற்கட்ட பணியை, 6,575 கோடி ரூபாயில் மேற்கொள்ளவும், மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட வேலைகள் 2 அல்லது 3 மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கவிஞர் முத்துலிங்கம்

மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கவிஞர் முத்துலிங்கம்

பசும்பொன் அறக்கட்டளை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி கருத்தரங்கம் சென்னை அபிபுல்லா சாலையிலுள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது ‘எம்.ஜி.ஆர். வழியை பின்பற்றி பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தவர் முதல்வர் அம்மாதான். மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். என்றும் திரைப்பட பாடலாசிரியர்., கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

முன்னாள் அரசவைக்கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் பேசியதாவது, ‘தேவர் ஒரு சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் சாதி பேதம் பார்க்காத சமத்துவஞானியாக வி்ளங்கிய ஆரசியல் ஞானி அவர்.

தேவர் படித்தது ஆறாம் படிவம் வரைதான். ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.

காசி இந்து சர்வ கலாச்சாலையில் இந்து மதத்தத்துவத்தைப் பற்றி மூன்று மணிநேரம் ஆங்கில பேராசியர்களே வியந்து போகும்படி ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார்.

அதற்குத் தலைமைதாங்கிய இந்து சர்வ கலாச்சாலை துணைத்தலைவர் சர்.சி.பி ராமசாமி ஐயர் பேசும்போது, ‘உலகநாடுகளை ஆங்கிலம் அடக்கி ஆள்கிறது. அந்த ஆங்கிலத்தையே மூன்று மணிநேரம் எங்கள் சேது நாட்டுச் சிங்கம் முத்துராமலிங்கம் அடக்கி ஆண்டு விட்டது. இது சேது நாட்டுக்கு மட்டுமல்ல. தமிழ் நாட்டுக்கே பெருமை இந்தியாவுக்கும் இந்தியர்களுக்குமே பெருமை’ என்று பேசினார்..

தேவர் முதன்முதலில் மேடையேரியது 1933 ஆண்டு சாயல்குடியில் நடந்த விவேகானந்தர்

வாசக சாலையில்தான். அங்கும் மூன்று மணி நேரம் பேசி எல்லோரையும் ஆச்சரியப்ட வைத்தார். அந்த விழாவில்தான் காமராசர் முதன் முதலில்  தேவரை சந்திக்கிறார். தேவரும் அப்போதுதான் காமராசரை பார்க்கிறார்.

இப்படிப்பட்ட பேச்சை இதுவரை கேட்டதில்லையென்று காமராசர் மற்றவர்களிடம் பாராட்டிப் பேசியதோடு  இப்படிப்பட்ட தேவர் காங்கிரஸ் கட்சிக்கு பேச்சாளராக இருந்தால் கட்சி வெற்றி பெறும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தாராம்.

1936 ல் நடந்த ஜில்லா போர்டு உறுப்பினர் தேர்தலில் முதுகுளத்தூர் பகுதியில் நின்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார் தேவர். அதுதான் அரசியலில் அவருக்கு முதல் நுழைவு. விருது நகர் நகராட்சியில் முதன் முதல் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு காமராசரை நிறுத்தி வெற்றி பெற வைத்ததும் தேவர்தான்.

1937 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காமராசர் ஜெயித்ததற்கு தேவர்தான் காரணம். அதுமட்டுமல்ல நீதிக்கட்சியை சேர்ந்தவர்களால் காமராசருக்கு ஏற்படவிருந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தியதும் தேவருடைய பேச்சுதான். தென் மாவட்டங்களில்  நீதிக்கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கும் தேவர்தான் காரணம்.

இதை ராஜாஜியே சொல்லியிருக்கிறார். தென் புலத்தில்  காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு என்னை பாத்தனென்று சொல்கிறார்கள்.  நான் பார்த்தனென்றால்  எனக்கு சாரதியாக இருந்து வெற்றி தேடி தந்தது இருபத்தொன்பது வயதே ஆன பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்கிற வாலிபர்தான். ்’ என்று மனம் திறந்து பாராட்டினார்  ராஜாஜி.

அந்த நேரத்தில் நீதிக்கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் அரசரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேவர். இது அந்தக் காலத்தில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. .அன்றைக்கு ராமநாதபுரம் தொகுதியென்பது ராமநாதபுரம்,பரமக்குடி முதுகுளத்தூர் தாலுகா அடங்கிய பெரிய தொகுதி.

பதவியில் இருப்பவன் தாமரை இலைத் தண்ணீரைப்போல ஒட்டியும் ஒட்டாமலும் பட்டும் படாமலும் இருக்க வேண்டும் என்றார் தேவர். அப்படி இருந்தாலும் கூட இருப்பவர்கள் இருக்க விடமாட்டார்கள் என்பதால்தான் தன்னைத் தேடி வந்த மாநில அமைச்சர் பதவி மத்திய அமைச்சர் பதவியை வேண்டாம் என்று மறுத்தார்.

உங்கள் பார்வேர்டு கட்சியை காங்கிரஸில் இணைத்துவிட்டு மத்திய அமச்சர் பதவியில் உங்களுக்கு எந்த இலாகா வேண்டுமோ அந்த இலாகவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நேரு கேட்டபோது, ‘நான் நேதாஜியை தலைவராக ஏற்றுக்கொண்டவன் உங்களைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. என்று நேருவிடம் பகிரங்கமாகவும். வெளிப்படையாகவும் சொன்னவர் தேவர்.

இதனால் வங்க மக்கள் தென்னாட்டு போஸ் என்று அடைமொழி கொடுத்து அழைத்துச் சிறப்பித்தார்கள். தேவரைப் போல துணிச்சல் மிகுந்த தலைவர்கள் அன்றைக்கு எவரும் இல்லை.

அரசியல் மேடையில் ஆன்மீகம் பேசமாட்டார். ஆன்மீக மேடையில் அரசியல் பேசமாட்டார். இன்றைக்கு திருமண மேடையில் கூட அரசியல் பேசி மேடையை அலங்கோலப் படுத்துபவர்கள்தான் அதிகம்.

தேவரது அரசியல் பேச்சில் அனல் பறக்கும். ஆன்மீக பேச்சில் ஞான ஊற்றுச் சுரக்கும். 1938ம் ஆண்டு மதுரையில் வைத்தியநாத ஐயர் தலைமையில் அரிசனங்கள் ஆலயப்பிரவேசம் செய்ததற்கு முத்துராமலிங்கத் தேவர்தான் பெருங்காரணம். இதை மூடி மறைத்துப் பலர் பேசுகிறார்கள்.

வாய்மை, தூய்மை, உண்மை, மெய்ம்மை, நேர்மை துணிவுடைமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தேவர். எல்லாருக்கும் நெருக்கமான தலைவர்கள் ைருக்கலாம். இணக்கமான தலைவர்கள் இருக்கலாம். ஆனால் தேவரைப் போல ஒழுக்கமான தலைவர்கள் எவருமே கிடையாது.

காமராசர், எம்.ஜி.,ஆர். ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது போல் தேவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். அப்படிச் சிறப்பித்தால் அது தேவருக்கு மட்டும் பெருமையாக இருக்காது. மத்திய அரசுக்கும் பெருமையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். அரசியலில்  இருந்தபோதுதான் தேவருடைய பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடினார். தேவருடைய படத்தை சட்டமன்றத்திலே திறந்து வைத்து தேவருக்குப் பெருமை சேர்ந்ததும் எம்.ஜி.ஆர்.தான்.  தேவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச்செய்து மாணாக்காச் செல்வங்களும் அவருடைய பெருமையை அறியும்படி செய்தவரும் எம்.ஜி.,ஆர்.தான் ர் எம்.ஜி.ஆர் வழியில் சென்னை நந்தனம் பகுதியில் தேவருக்குச் சிலை வைத்து அந்தச் சாலைக்கே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை என்று பெயரிட்டுச் சிறப்பித்தவர் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாதான்.

அதுமட்டுமல்ல பசும்பொன் கிராமத்தில் அவர் நினைவிடத்தில் அமைந்துள்ள மார்பளவுச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்துச் சிறப்பித்தவரும் அம்மாதான்.  தேவரிடம் இருந்த துணிச்சல் இன்று அம்மா ஒருவரிடம் மட்டுமே இருக்கிறது. தேவர் இருந்திருந்தால் அம்மாவை வாழ்த்தியிருப்பார். என்று பேசினார் முத்துலிங்கம். நிகச்சியில் கவிஞர் ஜீவபாரதி, மேடைமணி நடராசன், கவிஞர் இதயகீதம் ராமனுஜம், ராஜராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுவையில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன்

புதுவையில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன்:-

புதுவை மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரும், என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வந்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

புதுவையில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மாறாக தேர்தலில் வெற்றி பெறாத ஒரு தலைவரை முதல்அமைச்சராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தி இருக்கின்றது. எனவே எப்பொழுது வேண்டுமானாலும் புதுவை மாநிலத்திற்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

புதுவையில் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்று சொன்னால் மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திரமோடியினுடைய திட்டங்களை புதுவை மாநிலத்திற்கு அதிகமாக கொண்டு சேர்க்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆளுமை நிறைந்த ஒரு அரசாங்கம் புதுவைக்கு வர வேண்டும். அது நிகழ்வதற்கான வாய்ப்பும் பெருகி வருகிறது.

சட்டம்ஒழுங்கை பொறுத்தவரை அது அந்தந்த மாநிலங்களின் கையில்தான் உள்ளன. ரயில் நிலையம் மற்றும் ரயில் பயணம் இதுபோன்ற இடங்களில் மட்டும் ரயில்வே துறையின் கவனம் கொடுக்கப்படுகிறது. அவர்களது எல்லைக்கு அப்பாற்பட்டு அவர்களால் செயல்பட முடியாது. இது எல்லோருக்கும் நன்றாக தெரியும். சட்டம்ஒழுங்கை பொறுத்தவரை மாநில அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரயில்வே பகுதிக்கு உள்ளே தவறுகள் நடைபெறாத வகையில் ரயில்வே துறை செயல்படும்.

பிரதமர் நரேந்திரமோடி எந்த கட்சியின் ஆட்சி, எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து மாநில மக்களுக்கும் செய்ய வேண்டியது நமது கடமை, எனது இந்திய நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டியது எனது கடமை என்று எல்லா திட்டங்களையும் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வழங்கி வருகிறார்.

பிரதமர் எல்லா வி‌ஷயங்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுப்பார். சில வி‌ஷயங்களுக்கு சிறப்பம்சங்கள் புதுவை மாநிலத்திற்கு உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் பிரதமர்தான் தரவேண்டும் என்று சொன்னால் எந்தளவிற்கு சாத்தியம் என்பது குறித்து மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஏராளமான நிதிகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மாநில பா.ஜனதா கட்சி சார்பில் தீர்மானமே போடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது குறித்து நான் பலதடவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜூடன் பேசி உள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களின் கவலைகளை நேரடியாக தெரிந்து கொண்டிருக்கிறார். மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

உ.பி தேர்தலுக்கு பிரியங்கா தலைமை ஏற்கிறார் – காங்கிரஸ்

உ.பி தேர்தலுக்கு பிரியங்கா தலைமை ஏற்கிறார் – காங்கிரஸ்:-

வருகின்ற உத்திரபிரதேச மாநிலத்திற்கான சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ப்ரியங்கா தலைமை தாங்குவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு ராகுல் காந்தியின் வழிகாட்டுதல்கள் சரியாக அமயவில்லை வேண்டும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அம்மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சத்யதேவ் திரிபாதி கூறுகையில்: இதுவரை, பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ரேபரேலி தொகுதியிலும், துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் மட்டுமே பிரசாரம் செய்து வந்தார் தற்போது முதல் முறையாக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் தலைமை ஏற்க உள்ளார். தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 150 பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று தீவிர பிரச்சாரம் செய்வார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே சட்டம் மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது, அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் நீண்டகால கொள்கை.

கடந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்த போது பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொது சிவில் சட்டம் என்பது பாரதீய ஜனதா மற்றும் அதன் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவா சங்கத்திற்கும் மிகவும் பிடித்த சட்டம் ஆகும் இது. மீண்டும் பாஜக தற்போது ஆட்சிக்கு வந்த நிலையில் எப்படியாவது இதை அமல்படுத்தி விட வேண்டும் என்று அவை விரும்புகின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது பொதுசிவில் சட்டம் குறித்து ஆராயுமாறு சட்ட ஆணையத்தை பாஜக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது சிறுபான்மை மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலிடம் என்னை திரும்ப அழைத்தாலும் பதவியில் நீடிக்க மாட்டேன் : இளங்கோவன்

மேலிடம் என்னை திரும்ப அழைத்தாலும் பதவியில் நீடிக்க மாட்டேன் : இளங்கோவன்:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மேலிடம் தன்னை திரும்ப அழைத்தாலும், பதவியில் நீடிக்க மாட்டேன், என்று தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜிநாமா செய்து, டெல்லி தலைமைக்கு கடிதத்தை அண்மையில் அளித்திருந்தார். இதை கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில், தாம்பரத்தை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீடு முன்பு கூடிய மாவட்டத் தலைவர்கள் பலர் ராஜிநாமா முடிவைக் கைவிட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். தொண்டர் ஒருவர் தீக் குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர்களிடம் பேசிய இளங்கோவன், “பதவியை நானாகவே ராஜிநாமா செய்தேன். மேலிடம் என்னைத் திரும்ப அழைத்தாலும், பதவியில் நீடிக்க மாட்டேன். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், கட்சிக்கு நெருக்கடி கொடுக்காமல், மாவட்டத் தலைவர்கள் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இளங்கோவன்

மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இளங்கோவன்:

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை, தமிழக காங்கிஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபன்னா இதை உறுதி செய்துள்ளார்.

தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாததற்கு பொறுப்பேற்று இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தனது ராஜினாமா கடிதத்தை இளங்கோவன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Visit Chennaivision for More Tamil Cinema News

மீண்டும் சட்டசபையில் சலசலைப்பை ஏற்படுத்திய கச்சத்தீவு விவகாரம் : திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தில் கச்சத்தீவு குறித்து பேசினாலே, பெரும் சலசலப்பும், கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கச்சத்தீவு குறித்து ஆளும் அதிகும அரசு திமுக மீது குற்றம் சாட்ட, அதற்கு பதிள் அளித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆதாரங்களுடனும், புள்ளி விபரத்தோடும் பதில் அளித்து அவையையே அதிர வைத்தார்.

இந்த நிலையில், இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது குறித்து பேசியதாவது:

1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது குறித்து நான் கடந்த 20-ந்தேதி சட்டமன்றத்தில் பேசினேன். இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி 21-ந்தேதி பதில் அளித்துள்ளார்.

அதில் “கச்சத்தீவை தாரை வார்க்க ஒரு போதும் துணை போகவில்லை என்று அவர் கூறியுள்ளார். திடீரென்று ஒரு நாள் பத்திரிகையில் அறிவிப்பு வந்ததாகவும் தாம் கடுமையாக எதிர்த்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவை விட்டுக்கொடுக்க ஒருநாளும் சம்மதிக்கவில்லை என்று கூறும் கருணாநிதி டெசோ மாநாட்டில் கச்சத்தீவை உரிமை கொண்டாட பல சலுகைகளை பெற்றதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் கச்சத்தீவை விட்டுக் கொடுக்க இவரும் உடந்தையாக இருந்ததாக தானே அர்த்தம்” என்றார்.

அப்போது துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து விளக்கம் அளிக்க முயற்சி செய்தார். தி.மு.க. உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக எழுந்து நின்று குரல் கொடுத்தனர். சபாநாயகர் அவர்களை உட்காரும்படி கூறினார். என்றாலும் அனுமதி வேண்டும் என்று துரை முருகன் வற்புறுத்தினார்.

முன்னதாக கச்சத்தீவு பற்றி முதல்வர் ஜெயலலிதா பேச தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர்கள் அவ்வப்போது எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.

முதல்வர் ஜெயலலிதா இன்னும் கச்சத்தீவு தொடர்பான கேள்விகள் இருக்கின்றன. நான் பேசி முடித்ததும் உங்கள் கருத்துக்களை சொல்லலாம் என்றார்.

என்றாலும் தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று குரல் கொடுத்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்களும் தொடர்ந்து பதில் குரல் எழுப்பினார்கள். இதனால் கூச்சல்-குழப்பமாக இருந்தது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சபாநாயகர்:- தி.மு.க. உறுப்பினர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் பேசும் போது குரல் எழுப்ப வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையடுத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, “கச்சத்தீவு பற்றி பேச தொடங்கிய உடனேயே அவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்ற பயம். இதனால் தேவையில்லாமல் கூச்சலிட்டு இடையூறு செய்தார்கள். உங்களிடம் நான் எந்த பதிலும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் கட்சி தலைவரிடம் தான் பதிலை எதிர்பார்க்கிறேன். நான் பேசி முடித்த பிறகு பதில் சொல்லுங்கள் என்று கூறினேன். என்றாலும் அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பதால் வெளிநடப்பு செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

வெளிநடப்பு செய்த தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் கழித்து சபைக்கு திரும்பினார்கள்.

Visit Chennaivision for More Tamil Cinema News