ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடல் அவரது சொந்த ஊரான செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18–ந் தேதி ராம்குமார் சிறையில் உள்ள மின்ஒயரை பல்லால் கடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான குழுவில் தங்கள் சார்பில் ஒரு டாக்டர் இடம்பெற வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி எய்ம்ஸ் டாக்டர் ஒருவரை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை ஏற்காமல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அங்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவுப்படி எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ராம்குமார் இறந்து 13 நாட்கள் கழித்து பிரேத பரிசோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் இரவில் ராம்குமாரின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது. வரும் வழியில் ஆம்புலன்சுக்கு முன்னும், பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் போலீசார் வந்தனர். நேற்று காலை 10.50 மணி அளவில் மீனாட்சிபுரத்துக்கு ராம்குமார் உடல் கொண்டு வரப்பட்டது.

அப்போது ராம்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் ராம்குமாரின் வீட்டின் அருகே திரண்டு நின்றிருந்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும் ஓடிவந்து ஆம்புலன்சை சூழ்ந்தனர். அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பின்னர் ராம்குமார் உடல் ஆம்புலன்சில் இருந்து இறக்கப்பட்டு வீட்டின் முன்பு வைக்கப்பட்டது. ராம்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதவாறு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், புதிய தமிழகம் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், கிராம மக்கள் ராம்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ராம்குமார் உடல் வேறொரு வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக பண்பொழி அருகே உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாலை 4.45 மணி அளவில் ராம்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதையொட்டி தென்காசி உதவி கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு இருந்தனர். உதவி போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உடல் அடக்கம் முடிந்த பின்பு, ராம்குமார் தரப்பு வக்கீல் ராம்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “சிறையில் ஒரு கைதி தனது பற்களால் மின்ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும் படியாக இல்லை. இது போன்ற சம்பவம் முன்பு எங்கும் நடந்ததில்லை. எனவே சுவாதியின் கொலை, ராம்குமார் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோர உள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு வழக்கை சந்திப்போம். தேவைப்பட்டால் ராம்குமார் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய தேவையான முயற்சிகளை எடுப்போம்“ என்றார்.