சுப்ரீம் கோர்ட்டுக்கு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீடு மனுவை விசாரிக்க அதிகாரம் உண்டு

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007–ம் ஆண்டில் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா? என விவாதிக்கப்பட்டது.

தமிழகம் கேரள சார்பில் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க ஆதரவு தெரிவிக்கபட்டது. கர்நாடகாவும்,மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தன.

அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 19–ந் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதன்படி கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு தங்கள் தரப்பு வாதத்தை தாக்கல் செய்ய மேலும் 2 நாட்கள் கேட்ட அவகாசத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி மத்திய அரசு எழுத்துபூர்வ வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்  காவரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீடு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு என உத்தரவிட்டனர்.கர்நாடகா மற்றும் மத்திய அரசின்  கோரிக்கையை நிராகரித்தனர்.தமிழகத்திற்கு கர்நாடாகா டிசம்பர் 15 ந்தேதி வரை 2 ஆயிரம் கன் அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டனர்.