முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (டிச.5) காலமானார்.

தமிழகத்தின் இரும்பு மனுஷியாக திகழ்ந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்கு தேசிய தலைவர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,’தமிழ்நாடு மட்டுமல்ல. இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ எனக் கூறி ஜெயலலிதாவின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதயம் செயலிழந்ததால் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் எடுத்துச் செல்லப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலையே இறுதிச் சடங்குகளும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மெரீனாவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே செயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.