விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் ஆண்டுதோறும் நவராத்தியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டிற்கான நவராத்திரி உற்சவம் நேற்று முன்தினம் நவராத்திரி தொடங்கியது. இதையொட்டி, விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர், துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், அம்மன் வளாகத்தில் ஏராளமான பொம்மைகளை கொண்டு கொலு அமைக்கப்பட்டது. மாலை துர்கை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நவராத்திரி உற்சவத்தையொட்டி தினமும் மாலை விருத்தாம்பிகை மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. கொலுவை காண கோவிலுக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதனால், வழக்கத்தைவிட கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.