பிரேசில் கால்பந்து வீரர்கள் 72 பேர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 72 பேர் பயணம் செய்துள்ளனர். பிரேசில் நாட்டை சேர்ந்த ஏ பிரிவு வீரர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் வரும் புதன்கிழமை அன்று மெடலினில் நடைபெறக்கூடிய கோபா காலந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பொலியாவில் இருந்து கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்துக்கு சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானது.

எரிபொருள் தீர்ந்திருக்கலாம் அல்லது மோசமான வானிலை அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு  காரணமாக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த 72 வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டோனி இல்லையென்றால் கோலி இல்லை சேவாக் பேச்சு

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் கோஹ்லிக்கு முன்னாள் கேப்டன் தோனி கொடுத்த டெஸ்ட் வாய்ப்பை பற்றி சேவாக் தற்போது தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-12 ஆம் ஆண்டில்  ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று  தொடரை முழுமையாக இழந்தது.

இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட சேவாக் அந்த தொடர் பற்றி தற்போது வெளியிட்டுள்ள தகவலில் “ஆஸ்திரேலியாவுடனான அந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் விராத் கோஹ்லி சரியாக விளையாடவில்லை.

மேலும் அந்த சமயத்தில் ரோஹித் சர்மாவும் அறிமுகமாவில்லை. இதனால் விராத் கோஹ்லிக்கு பதிலாக ரோஹித் சர்மாவை களமிறக்க தேர்வு குழுவினர் முடிவு செய்தனர்.

ஆனால் அப்போதைய கேப்டனாக இருந்த தோனியும், நானும் விராத் கோஹ்லி மீது முழு நம்பிக்கை வைத்து கோஹ்லியே அணியில் தொடர வேண்டும் என்று பரிந்துரை செய்தோம்.

மீதமுள்ள வரலாறு என்ன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த சமயத்தில் தோனியும் நானும்  வேறு முடிவு எடுத்திருந்தால், இன்றைய இந்திய கிரிக்கெட் அணி வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

அரைஇறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து: ஹாங்காங் ஓபன் பேட்மின்டன்

ஹாங்காங் ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சமீர் வர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதே சமயத்தில் அஜய் ஜெயராம் காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.

ஹாங்காங்கில் உள்ள கவ்லூனில் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆண்களுக்கான போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் உள்ளூர் வீரரான என்.ஜி. கா லாங் அங்குசை எதிர்கொண்டார். இதில் 15-21, 14-21 என நேர்செட் கணக்கில் ஜெயராம் தோல்வியடைந்து காலிறுதியுடன் வெளியேறினார்.

மற்றொரு காலிறுதியில் சமீர் வர்மா, மலேசியாவின் வெய் சாங்கை எதிர்கொண்டார். இதில் 21-17, 23-21 என நேர்செட் கணக்கில் சமீர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியா சார்பில் பி.வி. சிந்து, சமீர் வர்மா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். சூப்பர் சீரிஸ் லெவல் தொடரில் முதன்முறையாக சமீர் வர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 நாடுகள் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நான்கு நாடுகள் இடையிலான சர்வதேச ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது.

மெல்போர்ன் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடியபோதும், மலேசிய பின்கள வீரர்கள் அபாரமாக செயல்பட்டதால் முதல் 23 நிமிடங்கள் கோல் எதுவும் விழவில்லை.

24-ஆவது நிமிடத்தில் மலேசிய வீரர்கள் செய்த தவறை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சர்தார் சிங், பந்தை சத்பிர் சிங்குக்கு கடத்தினார். சத்பிர், கோல் கம்பத்தின் அருகே நின்ற நிகின் திம்மையாவுக்கு பந்தை கடத்த, அவர் கோலாக்கினார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

இதன்பிறகு கடுமையாகப் போராடிய மலேசிய அணிக்கு 39-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் பெய்ஸல் கோலடித்தார். ஆனால் அடுத்த நிமிடமே இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதில் ரூபிந்தர் சிங் கோலடித்தார். 47-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மலேசியா கோலடிக்க, ஸ்கோர் மீண்டும் சமநிலையை எட்டியது.

இதன்பிறகு நிகின் திம்மையா 55-ஆவது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 56-ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடிக்க, இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இந்தியா.

மகளிர் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுடன் விளையாட மறுத்த இந்திய அணி

மகளிர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி மறுத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு ஆறு தரவரிசை புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐசிசி அட்டவணைப்படி கடந்த அக்டோபர் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடியிருக்க வேண்டும். ஆனால் இரு நாடுகள் இடையிலான பிரச்னை காரணமாக இந்திய அணி விளையாட மறுத்துவிட்டது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு 6 புள்ளிகளை வழங்கியிருப்பதோடு, அந்த அணி தொடரையும் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது ஐசிசி. இதனால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி, உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இதையடுத்து கடும் கோபமடைந்துள்ள பிசிசிஐ, ஐசிசிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளது. வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து இந்தியா விலக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

புனேயை வீழ்த்தி கவுகாத்தி ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி

3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 45–வது லீக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி)– புனே சிட்டி அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் கோல் விழவில்லை. பிற்பாதியிலும் பல முயற்சிகள் வீண் ஆனது. 81–வது நிமிடத்தில் கவுகாத்தி அணி முட்டுக்கட்டையை வெற்றிகரமாக தகர்ந்தெறிந்தது. கிடைத்த ‘பிரீகிக்’ வாய்ப்பில் கவுகாத்தி வீரர் ரோமாரிச் என்று செல்லமாக அழைக்கப்படும் கோப்பி கிறிஸ்டியன் நிட்ரி பிரமாதமாக கோல் அடித்தார். முன்பக்கம் அரண் போன்று வரிசையாக நின்ற வீரர்களை தாண்டி பந்து ‘கார்னர்’ பகுதிக்குள் நுழைந்தது.

புனே கோல் கீப்பர் ஈடெல் பீட் பாய்ந்து விழுந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. முடிவில் கவுகாத்தி அணி 1–0 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தி 4–வது வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. 6 ஆட்டங்களுக்கு பிறகு கவுகாத்தி ருசித்த முதல் வெற்றி இதுவாகும்.

இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மும்பையில் அரங்கேறும் லீக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.–மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளி பட்டியலில் 7–வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். அதே சமயம் முதலிடம் வகிக்கும் மும்பை அணி இதில் வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்து விடலாம். ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த முதலாவது லீக் 1–1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து, சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி

சீன ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி சிந்து தகுதிபெற்றுள்ளார்.

சீனாவின் புஷாவ்  நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின்  பி.வி.சிந்து, அமெரிக்காவை சேர்ந்த ஜாங்கை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த போட்டியில் முதல் செட்டை இழந்த சிந்து, தனது அதிரடி  விளையாட்டை வெளிப்படுத்தி அடுத்த இரண்டு செட்களையும் 22-20, 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

More

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தோல்வி!

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டி, சீனாவின் ஃபுசோ நகரில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் இந்தியாவின் சார்பில், மகளிர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம், ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் களம் காண்கிறார்கள்.

இதில் சாய்னாவைப் பொறுத்த வரையில் இந்தப் போட்டி அவருக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, ரியோவில் அதைவிடச் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 2-வது சுற்றிலேயே, தரவரிசையில் தன்னைவிட பின்தங்கிய உக்ரைனின் மரியா உலிடினாவிடம் வீழ்ந்தார். மேலும், காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அவர் போட்டிக்குத் திரும்பியுள்ளார்.

தனது முதல் சுற்றில் தாய்லாந்தின் பார்ன்டிப் புரனாப்செர்ட்சுக்குடன் மோதினார் சாய்னா. முந்தைய போட்டிகளில் சாய்னா 9 முறை இவரை தோற்கடித்தாலும் இன்று ஏமாற்றமான முடிவே கிடைத்தது. 16-21, 21-19, 14-21 என்ற செட் கணக்கில் பார்ண்டிபிடம் தோற்றுப்போனார் சாய்னா. போட்டிக்கு முன்பு பேட்டியளித்த இவருடைய பயிற்சியாளர் விமல் குமார், சாய்னா இன்னும் முழு பலத்துடன் மீளவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அது மிகச்சரியாக நிரூபணம் ஆகியுள்ளது.

ரியோ ஒலிம்பிக் மூலம் “வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை’ என்ற பெருமையைத் தனதாக்கிய சிந்து, சீன தைபேயின் சியா சின் லீயை தனது முதல் சுற்றில் எதிர்கொண்டார். இதில்  21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார் சிந்து.

More

சானியா மிர்சா பிறந்த நாளான இன்று அவர் சந்தித்த ஐந்து சவால்களை பகிர்ந்துள்ளார்

டென்னிஸ் என்றாலே உலக அரங்கில் இந்தியாவின் முகம் சானியா மிர்ஸா தான்.  ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் அவர் மிகக் கடுமையாக போராடியிருக்கிறார் சானியா மிர்ஸா. சிறுவயதில் இருந்து இப்போது வரை சானியா மிர்ஸா சந்தித்த ஐந்து சவால்களை பகிர்ந்துள்ளார்.

  1. ஆறு வயதில்  இருந்தே டென்னிஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் சானியா . அவரது ஆரம்பகால பயிற்சியாளரே  அவரது அப்பா இம்ரான் மிர்சா தான்  . 90 களின் ஆரம்பத்தில் இந்தியாவே சச்சின் வருகையால் கிரிக்கெட்டுக்கு ஜே போட்டுக்கொண்டிருக்க, ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என திட்டமிட்டே வளர்த்தார் இம்ரான் . பள்ளிப்பருவத்தில்  வகுப்பில் இருந்த நேரத்தை விட கிரவுண்டில் இருந்த நேரம் தான் அதிகம். ஆனால் சானியா  டென்னிசில்  மட்டுமல்ல வகுப்பிலும் நல்ல ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார். டென்னிஸ் தொடர்களில் ஜொலிக்க வேண்டுமென்றால் திறமை மட்டும் போதாது பணமும் வேண்டும், ஏனெனில் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவேண்டி நேரிடும், தங்கும்  ஹோட்டல், சாப்பாடு ஆகியவற்றுக்கு பெருந்தொகை செலவிட நேரிடும். தனது அப்பாவுக்கு  சிரமத்தைக் குறைப்பதற்காக, நிறைய ஸ்காலர்ஷிப்கள் பெறுவதற்காகவே  தினமும் கூடுதல் நேரம் உழைத்து  படிப்பிலும் கில்லியாக இருந்தார் . ஒரு நல்ல விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் எக்காரணமும் படிப்பை விடக்கூடாது, நன்றாக படிக்கவும் செய்து, விளையாடவும் செய்தால் பணச்சுமையை எளிதில் தகர்க்கமுடியும் “என்பது  சானியா அட்வைஸ்.
  2. தனது 16 வயதில், இளம்பெண்கள் இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் டைட்டில் வென்றார் . பெயர் பத்திரிகைகளில்  அடிபடத் தொடங்கவே சானியா மீது பலர் கவனம் குவித்தனர்.  இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி குட்டை பாவாடை அணிந்து விளையாடலாம் என சிலர் சர்ச்சைகளை கிளப்ப,   லைம் லைட்டுக்கு வந்தார், அந்த சர்ச்சைக்கு பிறகு சானியா மிர்சா விளையாடும் போட்டிகளை பலர் உற்று நோக்கத் தொடங்கினார்கள். “நான் போட்டியில் வென்றால், நான் அணிந்திருப்பது ஆறு இன்ச் உடையா, ஆறடி உடையா என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்  ஆனால் தோற்றுவிட்டால் அடுத்த மூன்று நாட்களுக்கு உடை குறித்து சர்ச்சை கிளப்ப ஆரம்பித்து விடுகிறார்கள். நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான்  தீர்மானிப்பேன் ” என துணிச்சலாக பதிலளிக்க இந்தியா முழுவதும் சென்சேஷன் ஆனார் . ஒரு பெண், பல தடைகளை கடந்து டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெயர் வாங்கித்தரும் வேளையில் கிளாமர் கிராமர் குறித்த வகுப்பெடுப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது சானியாவின் துரதிர்ஷ்டம்.
  3. குஷ்பு ஒருமுறை திருமணத்து முந்தைய உடலுறவு குறித்து பேசியது இந்திய அளவில் சர்ச்சையானது. அச்சமயத்தில் சானியாவின் கருத்து  என்ன என பத்திரிகையளர்கள் கேட்க, ” திருமணத்துக்கு முன்போ, பின்போ எதுவாக இருந்தாலும் பாதுக்காப்பான உடலுறவு இருப்பது அவசியம்” என்றார். ஏனெனில் அந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் குறித்த பேச்சுகள் ஊரெங்கும் நிரம்பியிருந்தது. சிலர் சானியாவின் கருத்தை சர்ச்சையாக்கி, திருமணத்துக்கு முந்தைய உடலுறவை ஆதரிக்கிறார் என செய்திகள் பரப்ப, நாடெங்கும் சானியாவின் உருவ  பொம்மைகள் எரிக்கப்பட்டது, அதன் பின்னர் “எக்காலத்திலும் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை  நான் ஆதரிக்க மாட்டேன், கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என அவர்  விளக்கம் கொடுத்த பின்னர் தான் பிரச்னை ஓய்ந்தது.
  4. சானியா மிர்சாவுக்கு அவரது பள்ளிப்பருவ நண்பர் சொஹ்ரப் மிர்சாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நின்று போனது. அதன் பின்னர் யாருமே எதிர்ப்பார்க்காத வண்ணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார் சானியா. சானியா பாகிஸ்தான் மருமகள் இந்தியாவுக்காக விளையாடக்கூடாது என பல அமைப்புகள் மீண்டும் சர்ச்சையை கிளப்ப நான் முதலில் ‘இந்தியாவின் மகள்’ இந்தியாவுக்காகத் தான் விளையாடுவேன் என பேட்டி தட்டி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மிர்சா .
  5. சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி,  புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர்  ‘ரீ என்ட்ரி’ எல்லோருக்கும் சக்சஸ் ஆவதில்லை. அதிலும் பெண்களாய் இருந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசம். திறமையால் வெற்றி கிடைத்தாலும்  ‘அவளுக்கு அதிர்ஷ்டம்ப்பா’ என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். திருமணம், அவதூறு போன்ற மனத்தடையையும், காயங்களால்  ஏற்பட்ட உடற் ரீதியான தடையையும்  தாண்டி  2-வது இன்னிங்ஸில், உச்சம்  தொட்டிருக்கிறார் சானியா. திருமணத்துக்குப் பிறகு ஒற்றையர் பிரிவில் விளையாடுவதால் பல காயங்கள் ஏற்படவே ஒற்றையர் போட்டிகளுக்கு முழுமையாக முழுக்கு போட்டார். முன்கையில்  பலம் அதிகம். கிரவுண்ட் ஸ்ட்ரோக்கில்  கில்லி என்பதால் இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய உயரம் தொட முடியும் என்பதை உணர்ந்து கடைசி இரண்டு ஆண்டுகளாக இரட்டையர் பிரிவில் விளையாடி  தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். 83 வாரங்களாக இரட்டையர் பிரிவில் உலக அரங்கில் முதலிடத்தில் இருக்கும் சானியாவுக்கு இன்றோடு முப்பது வயது நிறைவடைகிறது.

More

முன்னால் உலக சாம்பியன் பிரான்சிஸ் செகாவுடன் மோதுகிறார் விஜேந்தர்சிங்

கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங், அமெச்சூர் குத்துச்சண்டைக்கு விடைகொடுத்து விட்டு, தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் மோதி வருகிறார்.

இதுவரை தான் மோதிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள விஜேந்தர் சிங், தற்போது முன்னால் உலக சாம்பியனும், கண்டங்களுக்கு இடையிலான போட்டி சாம்பியனுமான தான்சானியாவைச் சேர்ந்த பிரான்சிஸ் செகாவுடன் மோதுகிறார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த உலக குத்துச்சண்டை அமைப்பின் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெட்யில் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற விஜேந்தர்சிங், அந்த பட்டத்தை தக்க வைக்க இப்போட்டியில் மோதுகிறார். இப்போட்டி வரும் டிசம்பர் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

34 வயதான பிரான்சிஸ் செகா 43 போட்டியில் 32 வெற்றிகள் பெற்றுள்ளார். இதில் 17 நாக்-அவுட் வெற்றியாகும்

More