ஊழல் புகார் வழக்கு: விசாரணைக்கு மறுத்த தென் கொரிய அதிபர்

ஊழல் புகார் வழக்கு: விசாரணைக்கு மறுத்த தென் கொரிய அதிபர்

ஊழல் புகாரில் சிக்கியுள்ள தென் கொரிய அதிபர் பார்க் கியூன்}ஹை அது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க மறுத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை அவரது வழக்குரைஞர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை வெளியிட்டார்.

அதிபர் பார்க் கியூன்-ஹையுக்கு மிக நெருக்கமான சோய் சூன்-சில் (60) என்ற பெண் அண்மையில் கைதானார்.

அதிபருடன் உள்ள தொடர்பைப் பயன்படுத்தி, சோய் சூன்-சில் தனது போலி தொண்டு நிறுவனங்கள் பெயரில் பெரும் தொழில் நிறுவனமான ஹுண்டாய், எஃகு நிறுவனமான போஸ்கோ போன்றோரிடமிருந்து, சுமார் 6.7 கோடி டாலர் (சுமார் ரூ. 450 கோடி) திரட்டினார்.

மேலும், பல முக்கிய அரசு நியமனங்களில் தலையிட்டார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, மோசடி, அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அதிபரின் முன்னாள் ஆலோசகர் கைதானார். அரசின் ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட குற்றத்தின் பேரில் மற்றொரு முன்னாள் ஆலோசகர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தென் கொரிய அரசியலில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அதிபர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு சட்ட ஆலோசனை வழங்கி வரும் யூ யங்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தற்போது மிக முக்கிய அலுவல்கள் காத்திருப்பதால், அதிபரால் இப்போது விசாரணையில் கலந்து கொள்ள முடியாது. அதே சமயத்தில் எதிர் தரப்பினர் அடுக்கடுக்காகப் புதிய குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். அவை எல்லாவற்றுக்கும் மிகக் குறுகிய கால அளவில் பதில் கூற முடியாது. எனவே தற்போது விசாரணையில் கலந்து கொள்ள முடியாது. அதிபரிடம் நேரடி விசாரணையை மேற்கொள்வது சாத்தியமல்ல என்றார் அவர்.

அதிபர் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு அதிபருக்குத் தனிப்பட்ட கூடுதல் அதிகாரங்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும்பான்மை உள்ளபோதிலும், அதிபரின் பதவிக்கு ஆபத்து இல்லை.

இரு முறை தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கோரினார்.

தென் கொரிய அரசியல் சாசனப்படி, அதிபரிடம் விசாரணை நடத்த முடியும் என்றாலும் அவர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டைத் தவிர, வேறு எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்ய முடியாது. ஆனால், கிரிமினல் குற்றச்சாட்டுகள் மீதான தொடர் நடவடிக்கைகளை அவருடைய பதவிக் காலத்துக்குப் பிறகு எடுக்க முடியும்.

தற்போது அரசு தரப்பு விசாரணைக் குழுதான் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. எதிர்க்கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தன்னிச்சையான விசாரணைக் குழுவின் விசாரணை டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அந்தக் குழுவின் முன் அதிபர் வருவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…