சிங்கம் 3 திரைப்படம் வெளியிடுவதில் மீண்டும் தாமதம்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக இருந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட தேதியில் படம் வெளிவராது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் எஸ் 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள்.

தவிர்க்கமுடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது. எல்லாம் நல்லதுக்கே என்று சூர்யா ட்வீட் செய்துள்ளார். தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் மறுமுறையீடு செய்து யு சான்றிதழுக்காக முயற்சி செய்யவேண்டியிருப்பதால் இந்தத் தாமதம் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. மேலும், சிங்கம் 3 படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற தடங்கல்கள் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளன.

டிசம்பர் 23-ம் தேதிக்குப் பிறகு இதுபோன்ற பெரிய பட்ஜெட் படம் ரிலீஸாக சரியான தேதி ஜனவரி 12 தான். பொங்கல் சமயத்தில் பலநாள்கள் விடுமுறை கிடைப்பதால் நல்ல வசூல் கிடைக்கும். அன்றைய தினம் விஜய் நடித்துள்ள பைரவா திட்டமிட்டப்படி வெளிவருவதால், தற்போது இரு படங்களும் நேரடியாகப் போட்டி போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.